இப்போது உங்களுடைய வங்கி, மொபைலில் ஆதார் இணைப்பை துண்டிப்பது எப்படி?

Read Time:4 Minute, 27 Second

அரசியல் சாசன சட்டப்படி ஆதார் அடையாள அட்டை செல்லும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் பல்வேறு கணக்குகளில் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்த முடியாது என்றது. இதனுடைய பொருள், புதிய வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண்ணையை சமர்பிப்பது கட்டாயம் கிடையாது என்பதாகும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாட்டில் உள்ள பலருக்கும் நிம்மதியாக அமைந்துள்ளது.

இனி ஆதார் இணைப்பு எதற்கு தேவை? எதற்கு தேவையில்லை? விபரம்

ஏனென்றால் வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் வாலட்ஸ்கள் மற்றும் கொரியர் நிறுவனங்கள்கூட இப்போது பயனாளரை அடையாளம் காண ஆதார் எண்ணை சட்டப்பூர்வமான ஆவணமாக கேட்கிறது.

உங்களுடைய ஆதார் இணைப்பை துண்டிக்க முடியுமா?

வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. இதனால் பயனாளர்கள் இணைப்பை மேற்கொண்டனர். இப்போது கட்டாயம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இணைப்பை துண்டிப்பது எப்படி? என்ற கேள்வி வலுத்துள்ளது. இதுதொடர்பான கேள்வியை பயனாளர்கள் சமூக வலைதளங்களிலும் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

ஆதார் அடிப்படையில் இ- கேஒய்சிக்கான (e-KYC, Electronic Know Your Customer ) அங்கீகாரத்திற்கான ஒழுங்குமுறை, சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது சேவை வழங்கும் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை ஒருவர் எப்போது வேண்டும் என்றாலும் துண்டித்துக்கொள்ளலாம். ஆதார் எண் கொண்டிருப்பவர்கள், கேஒய்சிக்கு தகவல்களை சேமித்து வைப்பதை எப்போது வேண்டும் என்றாலும் ரத்து செய்துக்கொள்ளாலாம். பயனாளர்கள் ரத்து செய்யும் பட்சத்தில் நிறுவனங்கள் கேஒய்சி தரவுகளை நீக்கிவிட வேண்டும், மேற்கொண்டு பகிரக்கூடாது.

ஒருவர் வங்கி மற்றும் மொபைல் சேவைகளுக்கு மேற்கொண்ட ஆதார் இணைப்பை எப்படி துண்டிப்பது? இந்தியா டுடே தகவலின்படி, வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு என்னுடைய கணக்கில் இருந்து பயோமெட்ரிக் தகவல்களை நீக்கிவிடுங்கள் என்று கடிதம் எழுத வேண்டும் என கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ எப்படி சமாளிக்கப்போகிறது

இதுபோன்ற நிலையில் சூழ்நிலையை ரிலையன்ஸ் ஜியோ எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜியோ நிறுவனம் இ-கேஒய்சி வழியாகவே புதிய தொழில்நுட்ப சேவையில் வாடிக்கையாளர்களை இணைத்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேசிய போது, ஆதாரை துண்டிக்கும் விவகாரத்தில் தெளிவான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தி குயண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மொபைல் வாலட்ஸ்கள் நிலை என்ன?

மொபைல் வாலட்ஸ்களில் இருந்தும் ஆதார் இணைப்பை துண்டிக்க வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். பேடியம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற வாலட்ஸ்களில் ஆதார் இணைப்பு என்பது நிராகரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதுபோன்ற வாலட்ஸ் நிறுவனங்களும் ஆதார் இணைப்பை துண்டிக்கும் வகையிலான வாய்ப்பை விரைவில் கொண்டுவரலாம் என பார்க்கப்படுகிறது.