இனி ஆதார் இணைப்பு எதற்கு தேவை? எதற்கு தேவையில்லை? விபரம்

Read Time:2 Minute, 53 Second

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றது.

அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் அட்டையை போலியாக உருவாக்க முடியாது. அதேசமயம் தனி நபர் சுதந்திரத்தை ஆதார் திட்டமும், அட்டையும் பாதிக்கிறது என்பதே பிரச்னையாக உள்ளது. மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் தரக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

57-வது பிரிவு ரத்து

முக்கியமாக,

தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பெற வழிவகை செய்யும் சட்டத்தின் 57-வது பிரிவை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றது.

இனி எதற்கு தேவையில்லை?

தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பெறும் வகையிலான சட்டம் ரத்து செய்யப்பட்டதால், வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்த முடியாது.

* வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதில்லை. வங்கிகளுக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது.

* தொலைதொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆதார் எண்ணை தர வேண்டியதில்லை.

* சிபிஎஸ்இ, நீட், யுஜிசி தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் கிடையாது.

* பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேடக்கக் கூடாது.

* ஆதார் இல்லையென்று குழந்தைகளுக்கு அரசு நிலத்திட்டங்கள் மறுக்கப்படக்கூடாது.

இணைப்பு எதற்கு தேவை?

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயமாகும்.

* பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும்.

* ரேஷன் கார்டு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அரசின் சலுகைகள், மானியத்தை பெற கட்டாயமாகும்.