கிரிமினல்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சட்டம் இயற்றவேண்டும் – உச்சநீதிமன்றம்

Read Time:5 Minute, 9 Second

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களை அகற்ற நாடாளுமன்றமே சட்டம் இயற்றவேண்டும் என்றது.

அரசியல்வாதிகள் தீவிரமான குற்றவழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது மற்றும் தண்டனை விதிக்கப்பட்டதும் பதவியை இழந்துவிடுவார்கள் என்ற விதிமுறை இப்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது அவர் குற்றங்கள் செய்ததாக முகாந்திரம் இருக்கிறது, அப்படிப்பட்ட நபர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, கடுமையான குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட எம்பி மற்றும் எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது. அரசியலில் குற்றம் என்ற புற்றுநோய் பரவுவதை நாடாளுமன்றம் தடுக்கவேண்டும்.

இதுபோன்றவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க கடுமையான நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றவேண்டும் என்றது.

தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்கள் தங்களின் குற்றப்பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

குற்றப்பின்னணி கொண்டவர்களை தேர்தலில் நிறுத்தும் அரசியல் கட்சிகளும், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மக்களை சென்றையும் வகையில் உள்ளூர் பத்திரிக்கை மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

அரசியல் கட்சிகள் தங்களுடைய இணையதளங்களிலும் வெளியிட அறிவிக்க வேண்டும். அப்போதுதான், தெரிந்துகொண்டு தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று பொதுமக்களால் முடிவெடுக்க இயலும்.

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை எவ்விதம் நடத்துவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றது.

1765 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தப்பினர்

“குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்பி, எம்எல்ஏக்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்” என்ற வழக்கில் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பதில் தாக்கல் செய்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 1765 எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள் மீது 3,816 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 771 வழக்குகள் மட்டுமே முடித்து வைக்கப்பட்டுள்ளன. 3,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உத்தரபிரதேசத்தில் 248, தமிழ்நாடு 178, பீகார் 144, மேற்குவங்கம் 139 என்ற எண்ணிக்கையில் எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இப்போதை தீர்ப்பால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து தப்பியுள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) அறிக்கையின்படி 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது வெற்றிப்பெற்ற 542 எம்பிக்களில் 184 எம்பிக்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது என்பதை தெரிவித்துள்ளார்கள். இது 2009-ம் ஆண்டை ஒப்பிடுகையில் அதிகமாகும். அப்போது இந்த எண்ணிக்கை 158 ஆக இருந்தது. மராட்டியத்தை சேர்ந்த உறுப்பினர்களே அதிகளவு கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியில் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் கர்நாடக மாநிலம் வருகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது, குற்றப் பின்னணி கொண்டவர்கள் போட்டியிடுவதை கட்டுப்படுத்தும் விதமான தீர்ப்பு பயனுள்ளதாக அமையும் என பார்க்கப்படுகிறது.