தகாத உறவு கிரிமினல் குற்றம் கிடையாது; ஆண்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு ரத்து

Read Time:6 Minute, 12 Second

தகாத உறவு கிரிமினல் குற்றம் கிடையாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆண்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு 497-ஐ ரத்து செய்தது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497-ன் படி, திருமணமான இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் திருமணமான ஒரு ஆணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்தது. ஆனால் பெண்ணுக்கு தண்டனை கிடையாது. இதனை எதிர்த்து இத்தாலியில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஜோசப் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், ஆண்- பெண் பாகுபாடு பார்க்கிறது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. விசாரணையின் போது மத்திய அரசு, திருமணம் என்பது புனிதமான உறவு என்பதால் தகாத உறவு கிரிமினல் குற்றமே என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. மனுதாரர் தரப்பில், ஒரே சட்டம் ஆண்களையும், பெண்களையும் தனித்தனியாக நடத்துகிறது, 19-ம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் 150 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையை அடுத்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கணவர் என்பவர் மனைவியின் எஜமான் கிடையாது. திருமணமான இன்னொரு பெண்ணுடன் ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி கிரிமினல் குற்றம் கிடையாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது. தகாத உறவு மகிழ்ச்சியற்ற திருமணத்துக்கு காரணம் கிடையாது. மகிழ்ச்சியற்ற திருமணத்தின் விளைவுதான் தகாத உறவு என்று கூறியது.

திருமணத்திற்கான புனிதத்தன்மை என்ன?

தகாத உறவு கிரிமினல் குற்றம் கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும் நிபுணர்கள் தரப்பில் எச்சரிக்கையும், பெண்களுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சட்டவிரோதமான” உறவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும்படியாக உள்ளது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

டெல்லி மகளிர்நல ஆணையர் சுவாதி மாலிவால் பேசுகையில்,

“தகாத உறவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையது அல்ல. இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரானது. திருமணங்களுக்கும், சட்டவிரோதமான உறவுகளுக்கும் வெளிப்படையாக உரிமம் வழங்கப்படுகிறது. இதில் திருமணத்திற்கான புனிதம் என்ன?”

என்ற கேள்வியை எழுப்புகிறார்.

சமூக ஆர்வலர் பிரிந்தா அதிஜே, விவகாரத்தை தெளிவுப்படுத்த கோருவதுடன், பலதாரமணத்தை அனுமதிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

“ஆண்கள் பெரும்பாலும் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள், முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியை கைவிடும்போது பிரச்சனை அதிகமாகும். தகாத உறவு ஒரு குற்றம் இல்லையென்றால், பாதிக்கப்படும் பெண் தன்னுடைய கணவருக்கு எதிராக வழக்கை எப்படி தொடரமுடியும்? அவரை கைவிடுவதை எதிர்க்க முடியும்? இது கவலைக்குரியது,” என்று கூறியுள்ளார் பிரிந்தா அதிஜே.

காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி பேசுகையில், “முத்தலாக்கை குற்றமாக பார்ப்பது போன்றதாக இதுவும் உள்ளது. அவர்கள் (ஆண்கள்) இப்போது நம்மைவிட்டு சென்றுவிடலாம், முத்தலாக் கூட சொல்லாமல் செல்லாம். அவர்கள் பலதாரமணம் செய்யலாம், இதனால் பெண்களுக்குதான் வேதனையை ஏற்படுத்தும். இது கிரிமினல் இல்லாதது மகிழ்ச்சியானது, அதனால் என்ன பயன்? இது எப்படி பயனளிக்கும். இதுதொடர்பாக நீதிமன்றம் வழக்கம் கொடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

பிருந்தா காரத்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பிருந்தா காரத் பேசுகையில், “பெண்களை ஆண்களின் சொத்தாக கருதும் வகையிலான சட்ட பிரிவை உடைத்தெறிந்த தீர்ப்பை வரவேற்கிறேன். அதே வேளையில், தகாத உறவில் ஈடுபடும் கணவருக்கு எதிராக மனைவி நீதிமன்றத்திற்கு செல்லவும், இழப்பீடு கோரவும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களால் முடியும். ஈடுபடுவோருக்கு எதிராக விவகாரத்து கோரவும் முடியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கப்படாத பரிந்துரைகள்:-

1837-ம் ஆண்டு தாமஸ் பேபிங்டன் மெக்காலே தலைமைமையிலான குழு தகாத உறவு கிரிமினல் குற்றம் என்றது. இது, 10 ஆண்டுகளுக்கு பிறகே இது சட்டமானது. 1971-ம் ஆண்டு 5-வது சட்ட ஆணையம் இச்சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. இதேபோன்று 2003-ம் ஆண்டு கிரிமினல் சட்டங்களில் மாற்றங்களை பரிந்துரைத்த நீதிபி மாலிமாத் இதுபற்றி குறிப்பிட்டார். பாலியல் சமனுக்கு எதிராக உள்ள சில வகை சட்டப்பிரிவுகளில் இதுவும் ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டது. அப்போதும் ஏற்கப்படவில்லை.