5 கோடி பயனாளர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக்கிங்; பாதிக்கப்பட்டவர்கள் யார்?

Read Time:4 Minute, 29 Second

5 கோடி பேஸ்புக் பயனாளர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பேஸ்புக் மேலும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது பிரசாரத்திற்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியது. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் விசாரணையை எதிர்க்கொள்ளும் பேஸ்புக், மீண்டும் இதுபோன்று ஏற்படாது என்றது. இதுபோன்று, இந்தியர்களின் தகவல்களும் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

5 கோடி பேஸ்புக் பயனாளர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் இருந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுமார் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது, 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஸ்புக்கில் இருந்த பாதுகாப்பு குறைபாட்டை பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தது. இப்போது பிரச்சனையை சரிசெய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் (View As) காரணமாக இப்போது பிரச்சனை நேரிட்டுள்ளது. உங்களுடைய கணக்கு பிறருக்கு எப்படி தெரியும் என்பதை பார்க்கும் வசதியான வியூ ஆஸ் இது பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் பற்றிய ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பாதுகாப்பு டோக்கனை வெளிப்படுத்துகிறது. இப்போது வியூ ஆஸ் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.

தொடக்க விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது நேரிட்டுள்ள ஹேக் தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடு செவ்வாய் கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது, வியாழன் அன்று சரிசெய்யப்பட்டது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

பேஸ்புக் கணக்கை உடனடியாக திறக்க பாஸ்வேர்டை சேவ் செய்து வைத்திருப்போம். இப்படி பயன்படுத்தும் கணக்கு லாக்-அவுட் ஆகி மீண்டும் பாஸ்வேர்டை கேட்டால் அது பாதிக்கப்பட்ட கணக்காகும். எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பயன்படுத்த முடிந்தால் அது பாதிக்கப்படாதது. இதனை சரிசெய்ய பேஸ்புக் அடிப்படையான நடவடிக்கையை எடுத்துள்ளது. பேஸ்புக் கணக்கை லாக்-அவுட் செய்து மீண்டும் லாகின் செய்யுமாறு பேஸ்புக் அறிவுறுத்தியுள்ளது.

“இப்போது எங்களுடைய விசாரணையை தொடங்கியுள்ளோம். தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை இனிதான் பார்க்க வேண்டும். இந்த ஹேக்கிங்கிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள், எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியாது,” என பேஸ்புக் தரப்பு தெரிவிக்கிறது.

மொபைல் எண்கள்

பேஸ்புக் கணக்கை தொடங்க பயனாளர்கள் தங்களுடைய மொபைல் எண்களை பதிவு செய்கிறார்கள். பேஸ்புக் இதனை தகவல் பாதுகாப்புக்கான காரணியாக பயன்படுத்துகிறது. இப்போது மொபைல் எண்கள், விளம்பரம் வெளியிடலுக்கு வழங்கப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.