இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம், சுனாமி; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

Read Time:3 Minute, 4 Second

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் அதனையடுத்து எழுந்த சுனாமி அலைகள் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியா நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது.

சுலேவேசியா தீவில் நேற்று முதலில் 6.1 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் சாலையில் தங்கியுள்ள காட்சி.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியது, இடிந்து விழுந்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தொடர்ச்சியாக நிலஅதிர்வுகளும் ஏற்பட்டது. மின்சார இணைப்பு, தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பாலு நகரை சுனாமி அலைகள் தாக்கியது.

2 மீட்டர் உயரத்திற்கு ஆர்ப்பரித்து எழுந்த சுனாமி அலைகள் கரையை நோக்கி பாய்ந்து வந்து தாக்கியது. இதில் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. கடலோரத்தில் உள்ள மசூதியை மூழ்கச் செய்யும் அளவுக்கு அலைகள் எழுந்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகியது.

பலர் சுனாமி ராட்ச அலையில் அடித்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுலேவேசியா தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிவாரண உதவிகளுக்கும், மீட்பு பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.