மன்னார் வளைகுடாவை சுத்தம் செய்யும் ஸ்கூபா டைவிங் வீரர்கள்! 

Read Time:3 Minute, 46 Second

பாம்பன், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் 3,600 அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.  கடற்பரப்பில் பவளப் பாறைகளும், கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் அரிதான கடல் வாழ் உயிரினங்கள் ஏராளமாக இங்கு காணப்படுகின்றன. கடல் வாழ் உயிரினங்கள் சுற்றுசூழல் மாசுபாட்டாலும், அதிக அளவில் வேட்டையாடப்படுவதாலும் அரிதாகி வருகிறது.

கடலுக்கு அடியில் வாழும் பவளப்பாறைகள் மற்றும் கடல் புல் உள்ளிட்ட அரிய கடல் வாழ் உயிரினங்கள் கடல் மாசுபாடு காரணமாக பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது.

2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படி அங்கு கடல் பசுக்களின் எண்ணிக்கை 1000-த்திலிருந்து 178 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் அங்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை வனத்துறை மேற்கொண்டுள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் கடல்நீர் பகுதியில் சுத்தம் மேற்கொள்ள காவலர்களுக்கு கடலுக்கு அடியில் நீந்தி செல்வது குறித்து ஸ்கூபா டைவிங் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்கள் மூலம் மண்டபம் தோணித்துறை கடலான பாக்ஜலசந்தி கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் நீச்சல் மூலம் பவளப்பாறைகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது பவளப் பாறைகளில் புகையிலை பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டீல்கள், காலி மது பாட்டீல்கள், வெட்டப்பட்ட மீன் பிடி வலைகள், எண்ணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை பவளப் பாறைகளில் படிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். கடல் மாசுபடுவதால் 2080-க்கும் மேற்பட்ட நீருக்கடியில் வாழும் உயிரினங்கள் பாதிப்பை எதிர்க்கொள்கிறது என வனத்துறை அதிகாரி குறிப்பிடுகிறார்.

இப்போது வனத்துறை மேற்கொண்டுள்ள சுத்தம் செய்யும் பணியால் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே கொண்டுவரப்படுகிறது.

வனத்துறை அதிகாரி சதீஷ் பேசுகையில், முதல்முறையாக வனத்துறை ஸ்கூபா டைவிங் மூலம் நீந்தியபடி கடலுக்கடியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளன. கடலில் உள்ள மீன்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில், கடல் வளத்தை பாதுகாக்க தயவு செய்து மீனவர்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என யாரும் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை வீச வேண்டாம். கடல் வளங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நம்முடைய சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.

மாநில வனத்துறை இந்த பணியை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது, ஸ்கூபாவின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.