சபரிமலை தீர்ப்பு: மசூதிகளில் பெண்களை அனுமதிக்க உத்தரவிடும் துணிச்சல் உண்டா? உச்ச நீதிமன்றத்துக்கு மார்கண்டேய கட்ஜூ கேள்வி

Read Time:3 Minute, 25 Second

சபரிமலை தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, மசூதிகளில் பெண்களை அனுமதிக்க உத்தரவிடும் துணிச்சல் உண்டா? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற வழக்கம் நூற்றாண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

மேலும், நூற்றாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை சட்ட விரோதமானது, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா ‘‘ஆழமான மத உணர்வுகளை கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுப்பூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல’’ என்று கூறினார்.

மார்கண்டேய கட்ஜூ கேள்வி

இந்த தீர்ப்பு விவகாரம் குறித்து முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மார்கண்டேய கட்ஜூ பதிவிட்டுள்ள செய்தியில்,

சபரிமலை கோவிலின் நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்றம் திறந்துள்ளது. இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் ஒவ்வொன்றுக்கும், அந்தந்த மத நம்பிக்கையும், தனிப்பட்ட வழிபாட்டு முறையும் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என, தீர்ப்பு வழங்குமா? மசூதிகளில் ஆண்களுடன் பெண்களும் சரிநிகர் சமமாக தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா? அல்லது இந்த தைரியம் குறிப்பிட்டு இந்துக்கள் விஷயத்தில் மட்டும் தானா? மசூதிகளில் போதமான இடம் இல்லை என்ற வாதத்தை பல முஸ்லிகள் வைக்கலாம். ஆனால் முன்னுரிமை பெண்களுக்கு என்ற அடிப்படையில் அவர்களை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதித்து விட்டு, முஸ்லிம் ஆண்கள் மசூதிக்கு வெளியே தொழுகை நடத்தலாம். அல்லது 50 சதவீத இடஒதுக்கீடு முறையை அவர்கள் பின்பற்றலாம்’’ என தெரிவித்துள்ளார்.