புற்றுநோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு; அமெரிக்கா, ஜப்பான் மருத்துவர்களுக்கு நோபல் பரிசு!

Read Time:3 Minute, 23 Second

புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட அமெரிக்கா, ஜப்பான் மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், 2018-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு “புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாதையை ஏற்படுத்திய ஜேம்ஸ் பி.அலிசன் (அமெரிக்கா) மற்றும் டசுகு ஹோஞ்சோ (ஜப்பான்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது”.

புற்றுநோய் மனித குலத்திற்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. புற்றுநோயினால் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

சிகிச்சை முறை

இப்போது உள்ள நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கு ‘ஹீமோதெரபி’ அளிக்கப்பட்டு வருகிறது. இவை, உடலில் உள்ள புற்றுசெல்களை அழித்து நோயின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது. ஆனால் புதிதாக கண்டறியப்பட்டுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை முறையானது, உடலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோக்கட்டி செல்களை அழிக்கச்செய்கிறது.

நம் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் புரோட்டீன் ஒன்று தடையாக செயல்படுகிறது. இந்த தடையை உடைத்து விட்டால் நம் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்றுநோய்க்கட்டிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும். இதனால் புற்றுநோயை விரட்ட முடியும் என்ற இருவருடைய கண்டுபிடிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் ‘புதிய மைல்கல்’ என்று கருதப்படுகிறது. இதை ‘இம்யுனோதெரபி’ என்கிறார்கள். இது புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறையாகும்.

ஏற்கெனவே உள்ள புற்றுநோய் சிகிச்சையைவிட இதன் வெற்றி விகிதம் (Success Rate) அதிகம் என்பதால், இந்த சிகிச்சைக்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது. “ஆண்டுதோறும் புற்றுநோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகிறார்கள். புதிய சிகிச்சை முறையானது மனித குலத்துக்கு கிடைத்த புதிய அத்தியாயம்” என்று நோபல் கமிட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.