“பன்னாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை” கிராமசபை தீர்மானம்

Read Time:2 Minute, 58 Second

“பன்னாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது” என கிராமசபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

சட்டமன்ற, நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட கிராம சபை தீர்மானம் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். கிராம சபை கூட்டம் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) நாட்களில் நடக்கிறது. 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே எஸ்.புதூர் கிராமத்தில் தனி அலுவலர் உமா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் எங்கள் கிராமத்தில் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்க மாட்டோம். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்ணை காக்கவும் மக்களை காக்கவுமே இந்த சிறப்புமிக்க தீர்மானத்தைப் போட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே கிராமத்தில் வணிகர்களும் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பது கிடையாது. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கிடையாது. இருப்பினும் மக்கள் மத்தியில் பயன்பாடு இருந்துள்ளது. 

இந்நிலையில் வணிகர்களின் நோக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதற்கும் கிராம சபையில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 
 
பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வளவு ஆசைவார்த்தைகளை கூறினாலும் அப்பகுதி வியாபாரிகள் அவர்களின் குளிர்பான பொருட்களை விற்பனை செய்வது கிடையாது என்பதை ஸ்திரமாக பின்பற்றி வருகிறார்கள். இப்போது மக்களுடைய ஆதரவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களும் இதனை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 மண்ணை பாதுகாக்க வேண்டும் என்ற அவர்களுடைய முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.