இயற்பியலுக்கான நோபல் பரிசு: 55 ஆண்டுகளுக்குப் பிறகு இத்துறையில் பரிசு பெறுகிறார் பெண் விஞ்ஞானி!

Read Time:3 Minute, 40 Second

2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயரை அறிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெரால்டு மௌரோ மற்றும் கனடாவை சேர்ந்த பெண் விஞ்ஞானியான டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.

கண்ணாடி இழையில் (ஆப்டிகல் டீஸர்ஸ்) புதிய கண்டுபிடிப்புகளை செய்ததற்காக அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசின் பாதித் தொகை வழங்கப்படுகிறது கனடா நாட்டு பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மெளரோ ஆகியோருக்கு லேசர் கற்றை மிக, மிக, நுண்ணிய அளவில் உருவாக்கியதற்காக பாதியளவு பரிசு வழங்கப்பட்டது. 

3 விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு எளிதாகக் கண் அறுவைசிகிச்சை செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பத்தையும் எளிதாக உருவாக்கலாம். பெண் விஞ்ஞானியான ஸ்டிரிக்லாண்ட் கனடாவில் உள்ள ஆன்டாரியோ நகரில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 1963-ம் ஆண்டில் மரியா ஜோபர்ட்டுக்கு பின் எந்தப் பெண் விஞ்ஞானிக்கும் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

 ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குப் பின் இயற்பியல் பிரிவில் பெண் விஞ்ஞானியான ஸ்டிரிக்லாண்டுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோக 118 ஆண்டு கால நோபல் பரிசு வரலாற்றில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது குறித்து ஸ்டிரிக்லாண்ட் கூறுகையில், ”அரை நூற்றாண்டுக்குப்பின் இயற்பியல் துறையில் பெண் விஞ்ஞானி ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது கொண்டாடப்பட வேண்டியது. பெண்கள் சாதிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது. இனி நம்பிக்கையுடன் மிக வேகமாக முன்னோக்கி செல்ல வேண்டும். பெண்ணாக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.