காப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

Read Time:12 Minute, 43 Second

இரு குழந்தைகளுக்கு இடையே இடைவெளி விட நினைக்கும் பெற்றோர்களின் ஒரு தீர்வாக இருப்பது காப்பர்-டி எனும் கருத்தடை சாதனம். இது பாதுகாப்பானது என்பதால், இந்தக் கருத்தடை முறையைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் இன்று அதிகரித்துள்ளன.

இந்தியாவில் T வடிவ ஐ.யூ.டி சாதனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஐ.யூ.டி என்பதைவிட காப்பர்-டி என்ற பெயரில் இது பிரபலமாக உள்ளது. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட இதில் நூல் போன்ற அமைப்பு ஒன்றும் காணப்படும்.

குழந்தை பேறு அடைந்த பெண்களுக்கு மட்டுமே காப்பர்-டி பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தை பெறாதவர்கள் காப்பர்-டி அணிய கூடாது. இது கருப்பையில் இரணத்தை ஏற்படுத்தி, மீண்டும் குழந்தை உருவாவதற்கான வாய்ப்பை குறைத்து விடும்.

ஐ.யூ.டி (Intra Uterine Device)

காப்பர்-டி என்னும் T வடிவிலான பிளாஸ்டிக் மற்றும் காப்பராலான டிவைஸ் கருப்பையில் மருத்துவர் மூலம் வைக்கப்படுகிறது. மாதவிலக்கு முடிந்த நாளிலேயே இதைப் பொருத்த வேண்டும். அப்போதுதான் கர்ப்பவாய் திறந்திருக்கும் என்பதுடன், கர்ப்பம் ஏற்படவில்லை என்ற உறுதி கிடைக்கும். காப்பர் டி-யை பொருத்துவதற்கு முன், அந்தப் பெண்ணின் ஜனனப் பாதை தொற்று நீக்கி சுத்தம் செய்யப்படும். பிறகு, ‘ஸ்பெக்யூலம்’ என்ற கருவி மூலம் பாதையைச் சிறிது விரிவு செய்து, இதைப் பொருத்துவார்கள். இதனுடன் வரும் நைலான் நூலானது.. ஜனனப் பாதையில் நாம் கைவிட்டு பார்த்தால், உணரும் தூரத்தில் இருக்கும்.

காப்பர் டி பொருத்திய ஆரம்ப நாட்களில் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புதிதாக ஒரு பொருளை உடல் அடையாளம் கண்டுகொள்வதால் தான் இப்படி. இதற்காக பயம் தேவையில்லை. ஒரு வாரம் கழித்து தாம்பத்ய வாழ்க்கையில் இயல்பாக ஈடுபட முடியும். பொருத்தப்பட்ட காப்பர் டி-யின் இயல்பைப் பொறுத்து, மூன்று, ஐந்து மற்றும் பத்தாண்டுகளுக்கு ஒரு தடவை என்கிற வகையில் மாற்றி விட வேண்டும்’’.

காப்பர்-டி எப்படி செயல்படுகிறது 

காப்பர்-டி இரு விதங்களில் பயனளிப்பதாக உள்ளது. கருப்பையில் விந்து வந்தடையும் இடத்திற்கு ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் முந்தி செல்கின்றன. ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பது விந்துவை விரைவில் அழித்து செயலற்றதாக மாற்றும் தன்மை கொண்டது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை ஐ.யூ.டி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஐ.யூ.டியின் தாக்கத்தால், பெண்ணின் கருப்பையில் இருக்கும் முட்டையை ஆணின் விந்தணு வந்து அடைவதற்கு தடை செய்கிறது.

இதைத்தவிர, தாமிரத்தால் செய்யப்பட்ட ஐ.யூ.டி சாதனமானது, விந்துக்களை முற்றிலும் அழித்துவிடுகிறது. கருப்பையினுள் வைக்கப்பட்ட உடன், IUD -யின் உள் இருக்கும் தாமிரம் , தாமிர அயனிகளை உருவாக்குகிறது. இது கருப்பை கருவுறுதலை தடுக்கிறது. இந்த தாமிர அயனிகள் கருப்பை வாயில் இருக்கும் திரவம் மற்றும் கருப்பை திரவத்துடன் கலக்கிறது. இப்போது கருப்பை திரவத்தில் இருக்கும் அதிகப்படியான காப்பர் அயனிகள், கருமுட்டையை தொட வரும் விந்தணுக்களை கொன்றுவிடுகிறது. இதில் விந்தணுக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நச்சு தன்மை கொண்ட பொருட்கள் அவ்வாறு செய்யலாம். இதையும் மீறி விந்து கருமுட்டையை அடைந்து விட்டது என்றால், இந்த காப்பர் கருமுட்டையோடு சேர்த்து அதை தடுத்து விடும். தாமிரத்தின் எந்த அம்சம் விந்தை அழிக்கிறது என்பது இதுவரை விடைகாண முடியாத புதிராக இருக்கிறது.

முன் எச்சரிக்கை காப்பர்-டி பொருத்திய பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஐ.யூ.டி. பொருத்தப்பட்ட 20 நாட்களுக்கு பிறகு பெல்விஸ் தொற்று ஏற்படுவது சிறிதளவு வாய்ப்பு உள்ளது. அதனை பொருத்துவதற்கு முன்னதாக முழு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கர்ப்பப்பைக்குள் இருக்கும் காப்பர் டி, வெளியில் நூல் போல் தெரிவதை, நம்மால் உணர முடியும். மாதம் ஒரு முறை, வெளியே நீட்டியிருக்கும் நூலை நாமே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

“காப்பர் டி, அதனுடைய இடத்தில் இல்லாமல் வேறு எங்காவது நகர்ந்து விடக்கூடிய குறைந்தபட்ச வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக கர்ப்பபையானது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அப்படி சுருங்கும்போது காப்பர் டி-யை வெளியே தள்ளவும், விரியும் போது உள்ளே இழுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. சிசேரியன் செய்து கொண்டவர்கள் என்றால், அதன் காரணமாக எங்கேயும் சிறு இடைவெளி இருந்தாலும், அது வழியாகவும் காப்பர் டி இடம்பெயர வாய்ப்பு உண்டு. ஆனால், இதெல்லாம் மிக அரிதானதே!

ஐ.யூ.டி.யை கருப்பை நிராகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்று அரிதான நிகழ்வாக ஐ.யூ.டி.யால் கருப்பையில் பாதிப்பை (ஓட்டை) ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனால் வலி இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் அறிகுறிகள் இருக்காது. மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் வைக்கும் போது பாதிப்பு என்பது குறைவானது. உங்களுக்கு வலியென்றால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்தல் வேண்டும்.

நீங்கள் கர்ப்பம் ஆவதை தடுப்பதில் ஐ.யூ.டி. தோல்வியை தழுவினால் இடமாறிய கருவளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற அபாயமும் உள்ளது. இதுவும் அரிதான ஒருநிகழ்வாகதான் உள்ளது.

காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம். அதன் பிறகு அகற்றுவது மிகவும் கஷ்டம்’.

Manadatory Credit: Photo by Garo/Phanie / Rex Features (1471612ut)

காப்பர் டி யை அகற்றுகிறீர்களா?

கருப்பையில் வைக்கப்படும் காப்பர்-டியை எப்போது வேண்டுமென்றாலும் மருத்துவர் மூலம் அகற்றிக்கொள்ளலாம்.

காப்பர் டி பொருத்திக்கொண்டதிலிருந்து மருத்துவரிடம் உரிய நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ளாமல் போனால், நூல் சில சமயம் உள்ளேயே போய்ச் சுருண்டுகொண்டு, குடலில் போய் ஒட்டிக்கொள்ளலாம். இதை ஸ்கேன் மூலமே அறிய முடியும்.
காப்பர் டி நகர்ந்து இருந்தாலும், கண்டிப்பாக ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்.

காப்பர் டி, கர்ப்பப்பைக்கு உள்ளே இருந்தால், மயக்க மருந்து கொடுத்துதான் எடுக்க வேண்டி இருக்கும்.

நோயாளிக்கு, வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியில்கூட உயிர் பிரிய வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பப்பைக்குள் சீழ் உண்டாகி, நோய்த் தொற்று வரலாம். இதனால், அதிக வலி, ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் இருக்கும். கெட்ட வாடை வீசும். மேலும், அகற்ற முடியாமல் போனால், அறுவைசிகிச்சைக் கூடத்துக்கு அழைத்துச்சென்று மயக்க மருந்து கொடுத்து, கர்ப்பப்பைக்குள் எண்டோஸ்கோபி மூலமாகப் பரிசோதிக்க வேண்டும்.
‘ஹிஸ்ட்ரோஸ்கோப்’ (Hysteroscope) முறையில் செர்விக்ஸ் வழியாக, கர்ப்பப்பையை அடைந்து, காப்பர் டி-யை அகற்ற வேண்டி இருக்கும்.

ஐ.யூ.டி.யின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்

நன்மைகள்:-

 • ஐயூடி 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு கர்ப்பமாவதிலிருந்து பாதுகாக்கிறது.
 • ஐயூடி செலுத்தப்பட்டதும் அதுவாகவே பணிகளை செய்ய தொடங்கிவிடுகிறது.
 • பெரும்பாலான பெண்கள் இதைப் பயன்படுத்தலாம்.
 • முகப்பரு, தலைவலி அல்லது மார்பக மென்மை போன்ற ஹார்மோன் பக்க விளைவுகள் கிடையாது.
 • பாலியல் தொடர்பான தொந்தரவு எதையும் ஏற்படுத்தாது.
 • தாய்ப்பால் கொடுக்கையில் ஐ.யு.டி. பயன்படுத்துவது பாதுகாப்பானது.
 • ஐ.யூ.டி. நீக்கப்பட்டவுடன் விரைவில் கர்ப்பமாக முடியும்.
 • இது மற்ற மருந்துகளால் பாதிக்காது.
 • ஐ.யூ.டி.யால் எடை பாதிக்கும் அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கருப்பை அல்லது கருப்பை புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறது இங்கிலாந்தின் என்.எச்.எஸ்.

குறைபாடுகள்:-

 • மாதவிடாய் காலங்கள் கடினமானதாகவும், வேதனை நிறைந்ததாகவும் இருக்கலாம்.
 • பாலுறவால் பரவக்கூடிய தொற்றுக்களிலிருந்து (எஸ்.டி.ஐ.) பாதுகாப்பதில்லை, எனவே நீங்கள் ஆணுறையை பயன்படுத்த வேண்டும்.
 • ஐ.யூ.டி. பொருத்தப்பட்டிருக்கும் போது உங்களுக்கு தொற்று ஏற்பட்டால், அது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது பெல்விஸ் தொற்றுக்கு வழிவகுக்கும்.

யாரெல்லாம் போடக் கூடாது?

 • ஒழுங்கற்ற மாதவிலக்கு, அதிக உதிரப்போக்கு இருந்தால், இது சரிவராது. இவற்றால் சில சமயம் லூப் தானாகவே கழன்றுவிட வாய்ப்பு உண்டு.
 • திருமணமாகாதவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் போடுவது இல்லை.
 • கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்னை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்னை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.

ஐ.யூ.டி சிறந்த நுட்பத்தில் பிறப்பு கட்டுப்பாட்டு கருவியாக செயல்படுகிறது. இதனை பயன்படுத்துவது தற்போது ஊக்குவிக்கப்படுகிறது. இது சற்று செலவு அதிகமானது என்பதால் மக்கள் சற்று தயங்குகிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகள், கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தும் செலவுடன் ஒப்பிட்டால், காப்பர்-டியின் செலவு குறைவு தான். இது 98% நம்பக தன்மை உடையது. பெண்கள் கருத்தரிக்க விரும்பினால், மருத்துவரின் உதவியுடன், எளிதாக காப்பர்-டியை நீக்கிவிடலாம்.

பொதுவாக, கருத்தடைகளின் எந்தவொரு வழிமுறையும், ஒருவர் திட்டமிட்டபடி நூறு சதவிகிதம் நடைமுறைபடுத்த முடிவதில்லை. ஆனால், ஐ.யூ.டியில் மட்டும் இந்த அபாயம் இல்லை.