சராசரியாக ரூ.71 லட்சம், 4 ஆண்டுகளில் ரூ.1,997 கோடி: எம்.பி.க்களின் சம்பளம் குறித்து ஆர்டிஐயில் தகவல்

Read Time:2 Minute, 43 Second

நாடாளுமன்ற எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் சலுகைக்காக மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,997 கோடி செலவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுட் என்ற ஆர்டிஐ அலுவலர் நாடாளுமன்ற செயலாளரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நாடாளுமன்ற செயலாளர் அளித்துள்ள பதிலில், 2014-15 நிதியாண்டிலிருந்து 790 எம்.பி.க்களுக்கு சம்பளம் மற்றும் சலுகையாக ரூ. ஆயிரத்து 997 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

மக்களவையில் தற்போது மொத்தம் 545 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் நியமன எம்.பி.கள் இருவர் தவிர்த்து 543 பேர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மக்களவை எம்.பி. ஒருவருக்குச் சராசரியாக ஆண்டுக்கு 71 லட்சத்து 29 ஆயிரத்து 390 ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. மாநிலங்களவை எம்.பி. ஒருவருக்கு 44 லட்சத்து 33 ஆயிரத்து 682 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக மக்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1,554 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 443 கோடி ரூபாய் சம்பளமாக 4 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனநாயகத்துக்கான சீரமைப்பு அமைப்பின் நிறுவனர் ஜகதீஷ் சோக்கர் பேசுகையில் “நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரித்து செல்வதால் மத்திய அரசுக்கு சுமை அதிகரிக்கிறது, இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். எம்.பி.க்களின் ஊதியம் 10 மடங்கு உயர்த்தப்பட்டாலும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எம்.பி.க்களுக்கு உயர்த்தப்படும் ஊதியம் போல், மக்களின் அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீடு, வாகனம், உணவு, மருத்துவம், சுத்தமான காற்று, தொலைத்தொடர்பு போன்றவற்றில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை” என கூறியுள்ளார்.