தமிழகத்திற்கு 7-ம் தேதி மிக அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

Read Time:4 Minute, 51 Second

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி மிக அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும், சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 5–ந் தேதி குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது. அது உருவாகிய 48 மணிநேரத்தில் அதாவது 6 மற்றும் 7–ந் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அது புயலாக வலுவடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதன் காரணமாக மீனவர்கள் குமரி கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதியில் 6–ந் தேதி முதல் 8–ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீனவர்கள் 5–ந் தேதிக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி மிக அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பியுள்ளது.

இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளதன்படி 7 -ம் தேதி தமிழகத்தில் 25 செமீ-க்கும் அதிகமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மிக மோசமான வானிலை நிலவும் என்பதை குறிப்பதே ரெட் அலர்ட். குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தயார் நிலையில் வைக்குமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டவர்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்கள், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அச்சமடைய தேவையில்லை

இதனிடையே தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என வருவாய் நிர்வாக அணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

ரெட் அலர்ட் உண்மையா?

இந்திய வானிலை ஆய்வு மையம் 7-ம் தேதி ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேசுகையில், தற்போது கனமழைக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. நெருக்கத்தில்தான் எதையும் கூற முடியும். ஓரிரு இடங்களில் கனமழைக்குத்தான் வாய்ப்பு உண்டு. அடுத்து வரக்கூடிய 2, 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறோம். நாளைதான் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

அதற்கு பிறகு 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், அதன் பின்னர் புயலாக மாறும். கனமழையைத்தான் சொல்கிறார்கள். மிக கன மழைக்கு வாய்ப்பு வந்தால் சொல்லப்படும். அது ஐந்து நாட்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். அப்படி வந்தால் அதுப்பற்றி கூறுவோம் என கூறியுள்ளார்.