தமிழக பல்கலையில் படித்ததாக போலிச் சான்றிதழ் வழங்கிய சங் பரிவார் மாணவர் தலைவர்!!!

Read Time:5 Minute, 44 Second

தமிழக பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலிச் சான்றிதழ் வழங்கிய ஏபிவிபி மாணவர் அமைப்பு தலைவர் சிக்கியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தல் செப்டம்பரில் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது.

இந்த தேர்தலில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவியது.

பொதுத்தேர்தல்களில் நடத்தப்படுவது போலவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா வெற்றி பெற்றார். மேலும் ஏபிவிபியின் சார்பில், துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். செயலாளர் பதவியை, என்எஸ்யுஐயை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி கைப்பற்றினார். தேர்தலை எதிர்த்து காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பில் டெல்லி உயர் நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கிவ் போலியான சான்றிதழை கொடுத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக காங்கிரஸ் மாணவர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து என்எஸ்யுஐ நிர்வாகிகள் கூறுகையில் ‘‘அங்கிவ் தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக கூறி டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பெற்றதாக கூறப்பட்ட பட்டச் சான்றிதழ் போலியானது.

அவரது சான்றிதழ் எண்ணை வைத்து விசாரித்ததில் போலியானது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஏபிவிபி மறுத்துள்ளது.

பொய்கள்…

அங்கிவ் பசோயா திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2013-லிருந்து 2016 வரை பல்வேறு வகையான பாடப்பிரிவுகளை படித்ததாக சொன்னார். ஆனால் அவரால் இளநிலைப் பட்டப்படிப்பில் எந்தெந்தப் பாடப்பிரிவுகளைப் படித்தார் என்பதை சொல்ல முடியவில்லை. மேலும் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக கூறப்பட்ட ஆண்டுகளில், அவரால் கல்லூரியில் துறை தலைவர்களாக இருந்த பேராசிரியர்கள் யாரேனும் ஒருவரின் பெயரைக்கூட நினைவுகூர முடியவில்லை.

அங்கிவ் பசோயா வேலூரில் வாழ்ந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. அவரது பேஸ்புக் பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் வாயிலாக அவர் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தின் நடந்த போராட்டங்களிலும் பிரச்சாரங்களிலும் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது என ஸ்க்ரோல் செய்தி வெளியிட்டது. ஆனால் அங்கிவ் பசோயா டெல்லியில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் அவருடைய சமூக வலைதளங்கள் மூலம் பரவி கிடைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஊடகங்களிடமிருந்து பல அழைப்புகள் விடுக்கப்பட்டும், இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகம் பதில் அளிக்கவில்லை.

போலிச் சான்றிதழ் அம்பலம்

இப்போது டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் ஏபிவிபி சார்பில் போட்டியிட்டு வென்ற அங்கிவ் பசோயா போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

அங்கிவ் பசோயா போலி சான்றிதழ் வங்கியுள்ளார் என்று திருவள்ளூர் பல்கலைக்கழகமே தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதன்மை கல்வி செயலாளருக்கு திருவள்ளூர் பல்கலைக்கழக பதிவாளார் எழுதியுள்ள கடிதத்தில், அங்கிவ் பசோயா போலி சான்றிதழ் வங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அங்கிவ் பசோயா எங்களுடைய பல்கலைக்கழகத்தில் எந்தஒரு படிப்புக்கும் சேரவில்லை, பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் படிக்கவில்லை. மொத்தத்தில் எங்களுடைய மாணவரே கிடையாது. அங்கிவ் பசோயா வழங்கியது போலியான சான்றிதழ். எங்களுடைய பல்கலைக்கழகம் வழங்கவில்லை. பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் அலுவலகத்தின் பதிவுகள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் உண்மையானதல்ல என்று கடிதம் வழங்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிவ் பசோயாவிற்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.