பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து போராடியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

Read Time:3 Minute, 49 Second

போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடிய சமூக ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டென்னிஸ் முக்வேஜாவுக்கும், நாடியா முராத்திற்கும் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும், போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒரு போர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அவலத்துக்கு முடிவு கட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

டென்னிஸ் முக்வேஜா (வயது 63) :

காங்கோவை சேர்ந்த மருத்துவரான இவர் அந்நாட்டின் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்தவர். மேலும் போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பலருக்கு இலவசமாக மருத்து சேவை செய்து வந்தவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற நற்பணிக்காக பணியாற்றி பெண்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஸ்திரமாக பணியாற்றியவர்.

பாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கியுள்ளார்.

நாடியா முராத் (வயது 25):

நாடியா முராத் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு கீழ் கொடூரமான வன்முறையை எதிர்க்கொண்டு உயிர்தப்பிய யாழிடி இன ஆர்வலர்.

2014-ல் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் விஸ்தரித்த போது யாழிடி இன மக்கள் அவர்களால் கொடூரமான துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டார்கள். பெண்கள் அனைவரும் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நாடியா முராத்தின் 6 சகோதரர்கள் கொலை செய்யப்பட்டு, கடத்தப்பட்டார். இதுபோன்ற ஒரு நரக வாழ்க்கையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மத்தியில் எதிர்க்கொண்டு தப்பியவர்தான் நாடியா முராத்.

உறவுகளை இழந்த பின்னரும் தன்னம்பிக்கையை கைவிடாமல், அங்கிருந்தபடியே யாழிடி இன பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து விடுவிக்கும் பணிகளை ஒருங்கிணைத்தார். அவரது முயற்சியால் நூற்றுக்காண பெண்கள் விடுவிக்கப்பட்டனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை வெளியுலகிற்கு விவரித்தவர். ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொண்டு முராத் தனக்கு நேர்ந்த கொடூரத்தை முதன் முதலாக சொன்னபோது உலகமே அதிர்ந்தது.

ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பெண்களை மீட்கும் அவரது பணியை பாராட்டி ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐநா அமைப்பின் தூதராகவும் முராத் பணியாற்றி வருகிறார். தற்போது நோபல் அமைப்பு அமைதிக்கான பரிசு வழங்கி முராத்தை பாராட்டியுள்ளது.