பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவு; 3 மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு

Read Time:3 Minute, 6 Second

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சத்தீஷ்காரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12-ம் தேதியும், 2-ம் கட்டத் தேர்தல் நவம்பர் 20-ம் தேதியும் நடக்கிறது. மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு நவம்பர் 28-ம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தேர்தல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பில் 3 மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார்ர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் 200 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் 142 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பா.ஜனதாவுக்கு 56 இடங்களும் மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சி நடைபெறும் சத்தீஷ்காரிலும் காங்கிரசே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 47 இடங்களிலும், பா.ஜனதா 40 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா அரசை காங்கிரஸ் அசைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இங்கு உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 122 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.