சபரிமலை தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் – தந்திரி அறிவிப்பு

Read Time:6 Minute, 37 Second

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது சபரிமலையின் அழிவுக்கு வழிவகுக்கும் என எதிர்ப்பு வலுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு தடை இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவஸ்தானம் தரப்பில் ஆரம்பத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அப்படியே அமல்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, தேவையான பணிகளை செய்து வருகிறது.

இதற்கிடையே சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் வற்புறுத்தல் காரணமாக மேல்முறையீடு செய்யும் முடிவை தேவசம் போர்டு கைவிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு வலுப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் கோட்டயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கண்டன பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர். சபரிமலை தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு, எதிர்க்கட்சிளும் ஆதரவளித்தது.

பேரணியில் பங்கேற்றபோது தந்திரி கண்டரரு ராஜீவரரு பேசுகையில், அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது, சபரிமலையின் அழிவுக்கு வழிவகுப்பதுடன், அதன் மாட்சிமையையும் இழக்கச் செய்யும். பந்தள ராஜ குடும்பம், ஐயப்ப பக்தர்கள், இந்து சமயத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பெண்கள் ஆகியோர், சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிப்பதை விரும்பவில்லை. அப்போது, உண்மையில் யார் அதை கட்டாயப்படுத்துகிறார்கள்?

சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், பெண்களுக்கான சுதந்திரம் கிடைத்துவிடும் என எந்த அடிப்படையில் கூறப்படுகிறது? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானதாகும். அந்தத் தீர்ப்புக்குப் பின்னால் சில உள்விவகாரங்கள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்து கலாசாரத்தை பாதிப்பதாக உள்ளது என்று கூறினார். இதுபோன்று ஐயப்ப பக்தர்கள் இந்து பாரம்பரியமான சனாதன தர்மத்தை காக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


டெல்லியில் போராட்டம் நடத்திய பெண் பக்தர்கள் “இந்து மத விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது,” என வலியுறுத்தினர்.

கேரள அரசின் அழைப்பு நிராகரிப்பு

போராட்டம் கேரள மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சுமுகத் தீர்வு காணும் முயற்சியாக சபரிமலை தந்திரி மற்றும் பந்தள ராஜ குடும்பத்தினருடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இரு தரப்பும் அழைப்பை நிராகரித்தது.

கேரள அரசு, தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யும் வரையில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறுஆய்வு செய்த பிறகு இதுபோன்ற கூட்டம் நடத்தினால் அதில் பங்கேற்போம்” என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுஆய்வு மனு

செங்கனூரில் தந்திரி குடும்பத்தை சேர்ந்த கண்டரரு மோகனரரு பேசுகையில், சபரிமலையில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாங்கள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம். அதன் மீது என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் முடிவை ஏற்கெனவே கேரள அரசு எடுத்துவிட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை

பந்தள ராஜ குடும்பத்தினரின் கருத்தை அறிந்த பிறகே, அரசுடனான பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்துகொள்ள இயலும். இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் பெண் காவலர்களை நியமிக்கும் அரசின் முடிவு, கோயிலின் பாரம்பரியம் மற்றும் மதச்சடங்குகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். கேரள அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோராமலேயே, பெண்களை அனுமதிக்கத் தயாராகிவிட்டதை பந்தள ராஜ குடும்பமும் விமர்சனம் செய்துள்ளது.

இதற்கிடையே சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு ஆணையர் என்.வாசு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று கூறியுள்ளார்.