பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு உளவு பார்த்த பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு விஞ்ஞானி கைது

Read Time:4 Minute, 3 Second

பெண்கள் பெயரில் பாகிஸ்தான் உளவுத்துறை வீசிய வலையில் சிக்கிய விஞ்ஞானி பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை தெரிவித்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏரோபேஸ் தளம் இந்தியாவின் ஏவுகணைகளை பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையம் (டிஆர்டிஒ) மற்றும் ரஷியாவின் கூட்டு நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது.

1998-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி இந்தியா மற்றும் ரஷியா இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் அடிப்படையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள நதிகள் பிரம்மபுத்ரா மற்றும் மோஸ்க்வா ஆகியவற்றின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே பிரமோஸ் என்ற பெயர். உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியா. இந்த ஏவுகணை உருவாக்கும் முயற்சியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது முதல்முறையாக பிரமோஸ் தளத்தில் உளவாளியென ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பிரமோஸ் தளத்தில் 4 ஆண்டுகளாக தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் என்பவன், அங்கிருந்து தொழில்நுட்ப தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளான் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்துள்ளது. பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு அவன் உளவு பார்த்துள்ளான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

குருஷேத்திரா என்ஐடியில் என்ஜீனியரிங் கோல்டு மெடல் வாங்கியவன் நிஷாந்த் அகர்வால் என தெரியவந்துள்ளது.

என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் எப்படி பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் பிடியில் சிக்கினான் என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக பேஸ்புக் வாயிலாக நிஷாந்த் அகர்வால் ஆசைக்கு தூண்டப்பட்டுள்ளார். பெண்கள் பெயரிலான போலியான பேஸ்புக் ஐடியின் வாயிலாக பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஆசைவார்த்தைகளை கூறி வலைவீசியுள்ளது, அதில் சிக்கியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

பேஸ்புக் ஐடியை பரிசோதனை செய்து பார்க்கையில் அது பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச ஏடிஎஸ் பிரிவு போலீஸ் அசீம் அருண் பேசுகையில், “என்ஜீனியரின் தனிப்பட்ட கம்ப்யூட்டரில் மிகவும் முக்கியமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த ஐடிகளுடன் அவர் ‘ஷாட்டிங்’ செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது,” என்று கூறியுள்ளார். இதுதொடர்பான விசாரணையை பாதுகாப்பு முகமைகள் தீவிரப்படுத்தி உள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.