பருவநிலை மாற்றம்; இந்தியாவை மிகமோசமான வெப்பம் தாக்கும் ஆபத்து

Read Time:4 Minute, 41 Second

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் இந்தியாவை மிகமோசமான வெப்பம் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐநா ஒத்துழைப்புடன் செயல்படும் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (ஐபிசிசி) தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முந்தைய உலக வெப்பநிலையை கணக்கில் கொண்டு, பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துள்ளதால், தற்போது உலக வெப்பமயமாதல் சராசரியைக் காட்டிலும் 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருப்பதாகவும், 2030-ம் ஆண்டு முதல் 2052 -ம் ஆண்டு இடையிலான காலகட்டத்தில் 2 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்கு முன்னதாகவே 1.5 டிகிரி செல்சியஸை தாண்டி விடும் என்றும் இதனால் ஏற்படும் பாதிப்புகளால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் மனிதர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கக்கூடும். இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. வெப்பம் அதிகரிப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். தண்ணீர் இல்லாமல், வறட்சி, விளைச்சல் பாதிக்கப்படுவது உள்ளிட்டவை ஏற்படும். இதுமட்டுமின்றி பெரிய அளவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. உணவு பொருட்கள் விலை உயரும். மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

வாழ்வாதார இழப்பு, உடல்நிலை பாதிப்புக்கள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்தால் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். உலக அளவில் 35 கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய துணைகண்டத்தை பொறுத்தவரை கொல்கத்தா மற்றும் கராச்சி நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகமானால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்படும்.

ஆசியாவிலும், அரிசி, கோதுமை, தானிய வகைகள் உள்ளிட்டவைகளின் உற்பத்தி குறையும்.

உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் 2015 ம் ஆண்டைப் போல் இந்தியாவில் கடும் வெப்பம் ஏற்படும். 2500 பேர் வரை உயிரிழக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

400 பக்கம் கொண்ட இந்த அறிக்கையின் சுருக்கம், எவ்வளவு விரைவாக புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதகுலம் எடுக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி உள்ளது.

சிறிய தீவு நாடுகளும், வெப்பமண்டலங்களில் வளரும் நாடுகளுக்கும், மற்றும் டெல்டா பிராந்திய நாடுகளும் உயர்ந்து வரும் கடல் மட்டங்களால் பாதிக்கப்படுகின்றன. இந்த அறிக்கை தொடர்பாக டிசம்பர் மாதத்தில் போலந்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஆய்வாளர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் மட்டுமே தப்ப முடியும் என்று எச்சரித்துள்ளனர்.

இதனிடையே கடந்த 150 ஆண்டுகளில் தில்லியின் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மும்பையில் 0.7 டிகிரி செல்சியஸ், சென்னையில் 0.6 டிகிரி செல்சியஸ்
வெபப் நிலை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.