கங்கைக்காக 4 மாதம் உண்ணாவிரதம் இருந்த சுற்றுசூழல் ஆர்வலர் உயிரிழப்பு!

Read Time:5 Minute, 19 Second

கங்கையை பாதுகாக்க கோரி ஜூன் 22-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் இருந்த சுற்றுசூழல் ஆர்வலர் ஜிடி அகர்வால் உயிரிழந்தார்.

கங்கையை சுத்தம் செய்வதற்காக மத்திய பா.ஜனதா அரசு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசின் நோக்கம் நிறைவேற ஏதாவது மாற்றம் நேரிட்டதா? என்றால் அடிப்படையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றுதான் களஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. கங்கையை சுத்தம் செய்யும் வகையில் குறிப்பிடத்தக்க வகையில் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே செய்திகள் வெளியாகியுள்ளது.

கங்கை சுத்தம் செய்யும் விவகாரத்தில் அரசாங்கத்தின் முயற்சிகளை மதிப்பீடு செய்த பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவானது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றது.

கங்கை பாயும் பல்வேறு மாநிலங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் எதுவும் சொல்லும்படியாக இல்லையென்றே தெரிவிக்கப்பட்டது. நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை சரிசெய்வதிலும் திட்டம் இதுவரையில் முன்செல்லவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது. தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கையிலும் திட்டத்தில் குறைபாடுகளை கண்டுள்ளது. கங்கையை தூய்மைபடுத்தும் ‘நமாமி கங்கா’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஐஐடியுடன் 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் நீண்ட கால திட்டத்திற்கான செயல் திட்டம் இறுதி செய்யப்படவில்லை. பல்வேறு குறைபாடுகள் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியது.

4 மாதங்கள் உண்ணாவிரதம்

சுற்றுசூழல் ஆர்வலர் ஜிடி அகர்வால் (வயது 87) கங்கையை சுத்தம் செய்ய வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும்; கங்கையின் கிளை நதிகளில் நீர்மின் திட்டங்களுக்கான கட்டுமானங்களை தவிர்க்க வேண்டும்; கங்கை பாதுகாப்பு மேலாண்மை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

கடந்த ஜூலை 22-ல் உண்ணாவிரதம் தொடங்கி அவர் வெறும் தண்ணீர் மட்டும் தேனுடன் கலந்து அருந்தினார். கங்கையை சுத்தம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசிடம் தொடர்ச்சியாக வைத்து வந்துள்ளார். தன்னுடைய கோரிக்கையை அரசு நிராகரித்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதையும் நிறுத்திவிட்டார். என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தலை வைக்கவே தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார் ஜிடி அகர்வால்.

4 மாதங்களாக உண்ணாவிரதம் இருந்த அவரை 10-ம் தேதி உத்தரகாண்ட் போலீஸ் ஹரிதுவாரில் இருந்து ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை உடனிருந்து பாதுகாத்து வந்த பிரேம் பேசுகையில், “நான் அவருடன் இருந்தேன். அவர் பலவீனமாக காணப்பட்டார், ஆனால் நிலையான முறையில் பேசினார். திடீரென்று, அவர் எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்,” என கூறியுள்ளார்.

ஜிடி அகர்வால் கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக பயணியாற்றியவர். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் பணியாற்றியவர். நதிகளை பாதுகாக்க வேண்டும் என்று ஏற்கனவே உண்ணவிரதம் இருந்தவர், பிரசாரம் மேற்கொண்டவர். 2009-ம் ஆண்டு அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாக பகிராதி நதியில் அணை கட்டுவது நிறுத்தப்பட்டது. அவருடைய இறப்பு தகவலை பதிவிட்டுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “மோடியின் செவுட்டு காதில் அவருடைய கோரிக்கைகள் கேட்காத நிலையில் உயிரிழந்து உள்ளார். இந்த உலகம் புனிதமான ஆத்மாக்களுக்கானது கிடையாது,” என வேதனையை பதிவு செய்துள்ளார்.