ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என தகவல்

Read Time:6 Minute, 34 Second

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்கள் தெரிவிப்பதாக பிரான்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரான்ஸிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதில், 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வழங்குவது என்றும், எஞ்சிய 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை.

அதன்பிறகு, ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு, பிரான்ஸிடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், போர் விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதில், பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அரசுதான் ஒப்பந்தத்திற்கு ரிலைன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலாண்டே கூறினார்.

இருப்பினும் ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம்தான் தேர்வு செய்தது, இதில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இதுதொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில் மீண்டும் அதனை வலுப்பெற செய்யுமாறு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

டசால்ட் நிறுவனத்தின் ஆவணம் சொல்வது என்ன?

பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட் (Mediapart) டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என்று ஆவணங்கள் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இருப்பினும் யாருடன் செயல்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய எங்களுக்கு முழு சுதந்திரமும் இருந்தது என்று டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையே ரபேல் ஒப்பந்தம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும், மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மத்திய அரசின் சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட கொள்முதல் குறித்த விவரங்கள், நாட்டின் பாதுகாப்பு கருதி, தனிநபர்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ வழங்கப்படுவதில்லை. மேலும், ராணுவ விவகாரங்களைப் பொதுநல மனுக்கள் வாயிலாக விசாரிக்க முடியாது. முக்கியமாக, ராணுவ கொள்முதல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்த மனுக்கள், தேர்தல் சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். எனவே, அவற்றை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, மனுக்களில் மிகக் குறைவான தகவல்களே அளிக்கப்பட்டுள்ளன. மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊழல் விவகாரம் குறித்து, தற்போது உச்சநீதிமன்றம் எதையும் உறுதி செய்யவில்லை. அதே வேளையில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒப்பந்தத்துக்காக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்த அடிப்படை விவரங்களையும் உச்சநீதிமன்றம் விரிவாக அறிந்துகொள்ள விரும்புகிறது. மேலும், அதன் சட்டப்பூர்வத்தன்மையை ஆராயவும் விரும்புகிறது.

எனவே, அது தொடர்பான விவரங்களை, மூடி முத்திரையிட்ட 3 தனித்தனி உறைகளில் வைத்து, வரும் 29-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள போர் விமானங்களின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்த தகவல்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்றனர். இது உச்ச நீதிமன்றத்தின் புரிதலுக்காக, மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கமே தவிர, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ் அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.