‘மீ டூ’ #MeToo பாலியல் புகாரை விசாரிக்க குழு, மத்திய அரசு திட்டம்

Read Time:6 Minute, 46 Second

‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க சட்ட நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைதளங்களில் #MeToo இயக்கம் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். பணியிடங்களில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் பதிவிடும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தெரிவிக்கும் தகவல்களை புகார்களாகவும் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தேசிய பெண்கள் ஆணையம் பாதிக்கப்பட்டவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் பேசி வருகிறது. மேலும், புகார்களை தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேனகா காந்தி வலியுறுத்தல்

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 468-ன் கீழ் சிறார்களுக்கு பாலியல் தொல்லை உள்பட எந்தஒரு குற்றத்திற்கும் மூன்று வருடம் சிறைத்தண்டனை விதிக்கலாம். ஆனால் குற்ற சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற கால நிர்ணயம் உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 473-ன் கீழ், நீதியின் நலன் அல்லது “தாமதமானதற்கு சரியாக விளக்கம் தெரிவிக்கப்பட்டால்” பழைய வழக்கை நீதிமன்றம் கையில் எடுக்கலாம். இருப்பினும் பாலியல் துஷ்பிரயேகம் போன்ற வன்முறைகளில் பாதிக்கப்படும் சிறார்கள் 18 வயதை எட்டிய பின்னர் புகார் தெரிவித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டியவரும். இப்போது நடிகைகள், செய்தியாளர் என பலர் #MeToo பிரசாரத்தின் மூலம் தங்களுக்கு நேரிட்ட பாலியல் தொந்தரவு சம்பவங்களை பொது வெளியில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரேயகம் தொடர்பாக புகார் கொடுக்க கால நிர்ணயம் செய்யக்கூடாது என சட்ட அமைச்சகத்திடம் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். “பாலியல் துஷ்பிரயேகம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தெரிவிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்யப்படக்கூடாது; 10-15 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்தவரை பாதிக்கப்பட்டவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனவே எந்தஒரு கால நிர்ணயமும் இல்லாமல் புகார்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். ” என்றார்.

விசாரிக்க குழு

இந்நிலையில் ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க சட்ட நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மேனகா காந்தி பேசுகையில், ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் ட்விட்டரில் பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி தெரிவித்து வருகின்றனர். அவற்றை நான் நம்புகிறேன். புகார் தெரிவிப்போரின் வலியையும் வேதனையையும் உணர்கிறேன். தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளையும், மோசமான அனுபவங்களையும் வெளியே சொல்வதற்கு அதிக அளவில் பெண்கள் முன்வரவேண்டும்.

‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தக் குழுவில் மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்பது எனது யோசனை. இதுபோன்ற வழக்குகள் அறைக்குள் 25 ஆண்டுகளாக அடைபட்ட யானை களைப்போல உள்ளன. இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் எவ்விதம் நிரூபிக்கப் போகிறார்கள் என்பதே எனது கேள்வி. வார்த்தைகளால் திட்டுவது, தொட்டு தொந்தரவு செய்தல், சீண்டல்கள், ஆடைகளை பிடித்து இழுப்பது போன்ற பல்வேறு இன்னல்களை பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

பெண்களை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்யும் அரக்கன்களின் பெயர்களை முதலில் அம்பலப்படுத்தி அவர்களை அசிங்கப்படுத்தவேண்டும். பெயர்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தினாலே போதும், அந்த ஆண்களுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்த உணர்வு பெண்களுக்கு ஏற்படும். இதற்கு அடுத்தபடியாக சட்ட நிபுணர்கள் குழு அமைத்து, பெண்களின் பிரச்சினைகளை கேட்பது ஆகும்.

பாலியல்ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை துணிச்சலாக வெளியே தெரிவிக்கவேண்டும்.

எனது தலைமையிலான அமைச்சகம், பெண்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அனுப்புவோரின் பெயர் குறிப்பிடாமல் தெரிவிக்கப்படும் பாலியல் புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக www.shebox.nic.in என்ற இணைய தளத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்த இணையதளத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம். [email protected] என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். இங்கு தெரிவிக்கப்படும் புகார்கள் அனைத்தையும் அமைச்சகம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.