மத்திய அமைச்சர் மீது 11 பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை புகார்

Read Time:13 Minute, 32 Second

பத்திரிக்கையாளராக இருந்து அரசியல்வாதியாகியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக 11 பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பெண்கள் #MeToo மூலம் பாலியல் ரீதியாக எதிர்க்கொண்ட துன்பங்களை பகிர்ந்துக்கொண்டு வருகிறார்கள். மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இப்புயல் தீவிரமாக மையம் கொண்டுள்ளது. பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு நேரிட்டதை வெளியே கூறிவருகிறார்கள். இதில் மையமாக அமைந்துள்ளது பத்திரிக்கையாளராக இருந்து அரசியல்வாதியாகியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர். அவருக்கு எதிராக அவருடன் பணியாற்றிய 11 பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்து உள்ளனர்.

பிரியா ரமணி

#MeToo பிரசாரத்தில் முதல்முறையாக எம்.ஜே. அக்பரை வெளிப்படுத்தியது பத்திரிக்கையாளர் பிரியா ரமணியாவார். Vogue இணையதளத்தில் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அவருடைய பெயரை குறிப்பிடாமல் கட்டுரையை எழுதினார். இப்போது #MeToo பிரசாரம் தீவிரம் அடைந்ததும் நான் எழுதியது அவரைப்பற்றிதான் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்தியா டூடே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், மிண்ட் போன்ற நாளிதழ்களில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மும்பையில் உள்ள ஓட்டலில் பேட்டி எடுக்க சென்ற போது அநாகரிகமானக நடந்துக்கொண்டதாக கூறினார்.

ருத் டேவிட்

இங்கிலாந்தை மையமாக கொண்டு பணியாற்றும் பத்திரிக்கையாளர் ரூத் டேவிட், எம்.ஜே. அக்பர் எவ்வாறு தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்தார் என்பதை #MeToo தெரியப்படுத்தியுள்ளார். எம்.ஜே. அக்பர் நியூஸ்ரூமில் சிறாராக எதிர்க்கொண்டது என்ற தலைப்பில் பிளாக்கில் பாலியல் தொல்லைகளை எழுதியுள்ளார். 1999-ம் ஆண்டு எம்.ஜே. அக்பருடன் பணியாற்றினேன், அப்போது அவருடைய அறைக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சி செய்தார். வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாத அறையில் என்னுடைய விரும்பம் இல்லாமல் என்னை முத்தமிட முயற்சி செய்தார் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தியாளார்

அமெரிக்காவை சேர்ந்த சிஎன்என் பத்திரிக்கையாளரான மஜ்லி டி புயு காம்ப் என்பவரும் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகாரை தெரிவித்துள்ளார். 18 வயதாக இருந்தபோது அக்பரின் கீழ் பணியாற்றியதாகவும் அப்போது அவர் தன்னடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘எனது நன்றியை தெரிவிப்பதற்காக அவருக்கு கையை நீட்டினேன். ஆனால் 55 வயதான அவர் தனது நாக்கை, 18 வயதான எனது வாயில் வைத்து முத்தமிட்டு விட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஷாபா நக்வி

மூத்த பத்திரிக்கையாளர் ஷாபா நக்வி எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டில், “அக்பர் என்னை எப்போதும் அவருடைய அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுப்பார், ஒருமுறை என்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டார்,” என கூறியுள்ளார்.

கஜாலா வஹாப்

எம்.ஜே. அக்பரின் தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோக செயல்கள் என்னை மிகவும் வேதனையடைய செய்தது என்று கூறியுள்ளார். தேவையற்ற பேச்சுக்காக எம்.ஜே. அக்பர் அவருடைய அறைக்கு என்னை அழைப்பார். என்னுடைய விரும்பம் இல்லாமல் என்னை தொட்டார், அநாகரிகமான முறையில் நடந்துக்கொண்டார் என கூறியுள்ளார்.

ஷுட்டபா பால்

ஷுட்டபா பால் என்ற பத்திரிக்கையாளரும் தனக்கு நடந்த கொடூரமான அனுபவத்தை வெளியே தெரியப்படுத்தியுள்ளார். “எம்.ஜே. அக்பர் என்னை மிகவும் இறுக்கமான முறையில் கட்டிக்கொண்டார். மோசமாக நடந்துக்கொண்டார்,” என கூறியுள்ளார்.

சுமா ரஹா

பத்திரிக்கையாளர் சுமா ரஹா தனக்கு நடந்த அனுபவங்களை தெரிவித்துள்ளார். ஆசியன் ஏஜ் இதழில் வேலைக்கு சேர்வதற்காக ஒரு இண்டர்வியூவை அட்டென் செய்ய அழைத்திருந்தார் அக்பர். கொல்கத்தாவில் இருக்கும் தாஜ் பெங்கால் ஹோட்டலில் 1995-ம் ஆண்டு, அவரின் அறையில் இந்த இண்டெர்வியூ நடை பெற்றது. இண்டெர்வியூ நடைபெற்று முடிந்தவுடன் அக்பர் பேசிய பேச்சு என்னை அந்த வேலையில் சேர்வதைப் பற்றி யோசிக்க வைத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிகா கஹ்லவ்த்

எம்.ஜே. அக்பருடன் 1995-97 வரை வேலை செய்த கனிகா கஹ்லவ்த்தும் இதனை உறுதிசெய்துள்ளார். எல்லோரிடமும் இதுபோன்றுதான் நடந்துக்கொள்வார், அவர் மீதான குற்றச்சாட்டை விரிவாக விசாரிக்க வேண்டுமென்றெல்லாம் கிடையாது. அவர் அப்படிப்பட்டவர்தான் என கூறியுள்ளார்.

சுபர்னா ஷர்மா

தற்போதைய ஆசியன் ஏஜ் ஆசிரியர் சுபர்னா ஷர்மா தன்னுடைய 20 வயதுகளில் எம்.ஜே. அக்பருடன் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார். அக்பர் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிக்கை ஒன்றில் அக்பருக்குக் கீழே 1993 முதல் 1996 வரை வேலை பார்த்தவர் சுபர்னா. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்கு அவர் அளித்த பேட்டியில் “செய்தித்தாளிற்கான பணி ஒன்றில் நின்று கொண்டிருந்த போது அவர் எனக்கு பின்னால் நின்றிருந்து என்னுடைய உள்ளாடையின் ஸ்டார்ப்பினை இழுத்து ஏதோ ஒன்றை கூறினார், அது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் அன்று நான் கத்திவிட்டேன்.

அதன் பின் ஒரு நாள் அவருடைய அலுவல் அறைக்கு சென்ற போது என்னுடைய டீசர்ட்டில் எழுதிய வாசகத்தை பார்த்து, என்னுடைய ஆடையை முறைத்தவாறே ஏதோ ஒன்றைக் கூறினார். பின்பு ஒரு நாள் எங்களின் அலுவலகத்திற்கு புதிதாக் சேர்ந்திருந்த பெண்ணைப் பற்றி என்னிடமே அவள் யார் என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் என்ன செய்வது என்று அறியாமல் திண்டாடிக் கொண்டிருந்தோம். எங்களின் புகார்களை பதிவு செய்ய அன்று எங்களுக்கு என ஒரு தளம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அக்பர் இச்சைக்கு ஆளாகும் பெண்கள் அனைவரும் தனியாக தங்கியிருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் தங்களின் பணிகளை மிகவும் நேசிப்பவர்கள் தான். அவர்களிடத்தில் ஒரு செய்தியை சேகரிக்கச் சொல்லி வேறொரு ஊருக்கு அனுப்புவது, பின்னர் அவர்களை பார்க்கச் செல்கின்றேன் என பின்னால் செல்வது, தன்னுடன் ஒரே காரில் பயணிக்க நிர்பந்திப்பது என பல்வேறு வேலைகளை செய்திருக்கிறார் அக்பர்.

ப்ரெர்னா சிங் பிந்திரா

பத்திரிக்கையாளர் பிந்திரா தன்னுடைய அனுபவம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அக்டோபர் 7-ம் தேதி பெயர் ஏதும் குறிப்பிடமால் ட்வீட் செய்தார். பின்னர் அந்த அறிவாளி எடிட்டர் இவர் தான் என்று எம்.ஜே. அக்பரை அடையாளம் காட்டினார். என்னுடைய அனுபவங்கள் 17 வருடங்களுக்கு முற்பட்டவை. அதே நேரத்தில் என்னிடம் எந்த ஆதரங்களும் இல்லை. ஆனால் நடந்த அனைத்தும் உண்மை. உண்மைக்கு மாறாக ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் ஏற்படும் நிலை பற்றி நான் நன்றாகவே அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.

காதாம்பரி வாடே

மற்றொரு பத்திரிகையாளர் காதாம்பரி வாடே கூறுகையிலும் எம்.ஜே. அக்பர் மோசமான பார்வை கொண்டவர், என்னிடம் பேசும்போது எல்லாம் என்னுடைய மார்பகங்களை மட்டுமே பார்ப்பார் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மவுனம்

பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார்களை அடுக்கிய நிலையில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிப்படையாக பதில் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருவாரமாக எம்.ஜே. அக்பர் வெளிநாடு பயணத்தில் இருந்ததால், எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. பா.ஜனதா தலைவர்களும், பிரதமர் மோடியும் கூட எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர்.

சமூக வலைதளங்களில் வந்த குற்றச்சாட்டை அப்படியே நம்பிவிட முடியாது. அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றார் அமித்ஷா.

‘மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் விவகாரத்தில் மோடியின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இதற்கிடையே அவர் பதவி விலக வாய்ப்பு இல்லையெனவும் தகவல்கள் வெளியாகியது.

வழக்கு தொடர்வேன் என எச்சரிக்கை

எம்.ஜே. அக்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் புகார்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளார், மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.

வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஜோடிக்கப்பட்டது. இந்த பொய்யான, அடிப்படையற்ற மற்றும் காட்டுத்தனமான குற்றச்சாட்டுக்கள் என்னுடைய நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தை என்னுடைய வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்வார்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த புயல் எழும்பியுள்ளது தொடர்பாக கேள்வியை எழுப்பியுள்ளார் எம்.ஜே. அக்பர். இந்த சம்பவத்தினால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவது கிடையாது என தெரிவித்துள்ளார். எம்.ஜே. அக்பருக்கு எதிராக புகார்களை தெரிவித்து வரும் பெண்கள் அனைவரும் பத்திரிக்கையாளர்கள்தான், அவருடைய அலுவலகத்தில் எவ்வாறெல்லாம் தவறாக நடந்துக்கொண்டார் என பட்டியலிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சென்னையில் மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் பேசுகையில், விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பது நல்லதே; ராஜினாமா செய்யாமல் இருந்தால்தான் இன்னும் பலமாக பேசமுடியும் ஆதாரங்களை திரட்டமுடியும். பதவியை ராஜினாமா செய்திருந்தால் சில நாட்களில் அவரை மறந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் சாடல்

எம்.ஜே. அக்பரின் அறிக்கையை நிராகரித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, ஏன் பா.ஜனதா தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

“12-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொல்லை தொடர்பான அனுபவங்களை தெரிவித்துவரும் நிலையில் இதனை எப்படி அரசியல் சதியாக கூறமுடியும்? அவர் பதவி விலகுவதால் எந்தஒரு தொகுதியால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது? அரசு பாலியல் வன்முறையாளர்களை பாதுகாக்கிறது, ஊக்குவிக்கிறது என்பதுதான் தெளிவாக தெரிகிறது,” என்று விமர்சனம் செய்துள்ளார்.