ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களும்.. பலன்களும்…

Read Time:5 Minute, 45 Second

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமேஸ்வரம் தலமும் ஒன்றாகும். ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமைகளாக கருதப்படுகின்றது. இலங்கை மீது படையெடுத்து ராவணாதி அரக்கர்களை வென்று, ராமன் அயோத்திக்கு திரும்பும் வழியில், இராவணனை கொன்றதனால் ஏற்பட்ட பழியைப் போக்கிக்கொள்வதற்கு, ராமேஸ்வரத்தில் சீதாப்பிராட்டியால் மணலால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது.

ராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்துக்கு ராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வநாதர், பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர், பள்ளிகொண்ட பெருமாள் அருள் புரிகிறார்கள். அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்துக்கு வடக்குப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விஸ்வநாதர். காசி விஸ்வநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பிறகே, ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு பூஜை நடைபெறுகிறது.

வடக்கே உள்ள காசியும், தெற்கே உள்ள ராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணியத் தலங்களாக கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள், ராமேஸ்வரம் தலத்துக்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால்தான், காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். கோபுர தரிசனம் கோடி நன்மை தரும் என்பதைப் போலவே ஆலயங்களின் தல விருட்சங்களை சுற்றிவருவதும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் நன்மை பயக்கும் விஷயங்களாக கருதப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் கோவிலில் சுவாமி தரிசனத்தைவிட தீர்த்தமாடுவதுதான் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே மேலும் பல தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுவதை தொடங்கி, பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

அக்னி தீர்த்தம்

ராமேஸ்வரம் கடல் ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தமான ராமேஸ்வரம் கடலுக்குப் புராணரீதியிலான விளக்கமும் வழக்கத்தில் இருக்கிறது. சீதையின் கற்பின் சிறப்பை உலகுக்குக் காட்ட ராமன் அவரை அக்னி பிரவேசம் செய்யச் சொல்கிறார். அக்னியில் பிரவேசித்த சீதையின் கற்பு அந்த அக்னியையே சுட்டதாகவும், தன்னுடைய வெப்பத்தை தணிக்க ராமேஸ்வரம் கடலில் அக்னி பகவான் மூழ்கியதாகவும் புராணக் கதை கூறுகிறது.

அக்னி தீர்த்தம்

மேலும் சீதையை தொட்ட தோ‌ஷம் நீங்குவதற்காகவும், அக்னி பகவான் இந்தக் கடலில் நீராடியதாக புராணம் தெரிவிக்கிறது. அக்னி தீர்த்தம் தோஷ நிவர்த்தி செய்யும் மகிமை கொண்டதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே இருக்கும் 22 தீர்த்தங்களும், பலன்களும்.

தீர்த்தங்களும்.. பலன்களும்..

 1. மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெருகும்.
 2. சாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும்.
 3. காயத்ரி தீர்த்தம் – உலக நன்மை உண்டாகும்.
 4. சரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் உயர்வு தரும்.
 5. சங்கு தீர்த்தம் – வசதியாக வாழ்வு அமையும்.
 6. சக்கர தீர்த்தம் – மன உறுதி கிடைக்கும்.
 7. சேதுமாதவ தீர்த்தம் – தடைபட்ட பணிகள் தொடரும்.
 8. நள தீர்த்தம் – தடைகள் அகலும்.
 9. நீல தீர்த்தம் – எதிரிகள் விலகுவர்.
 10. கவய தீர்த்தம் – பகை மறையும்.
 11. கவாட்ச தீர்த்தம் – கவலை நீங்கும்.
 12. கந்தமாதன தீர்த்தம் – எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.
 13. பிரம்மஹத்தி தீர்த்தம் – பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கும்.
 14. கங்கா தீர்த்தம் – பாவங்கள் அகலும்.
 15. யமுனை தீர்த்தம் – பதவி வந்து சேரும்.
 16. கயா தீர்த்தம் – முன்னோர் ஆசி கிடைக்கும்.
 17. சர்வ தீர்த்தம் – முன்பிறவி பாவம் விலகும்.
 18. சிவ தீர்த்தம் – சகல பிணிகளும் நீங்கும்.
 19. சத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தியாகும்.
 20. சந்திர தீர்த்தம் – கலை ஆர்வம் பெருகும்.
 21. சூரிய தீர்த்தம் – முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.
 22. கோடி தீர்த்தம் – முக்தி அடையலாம்.