குறைவில்லாத வாழ்வருள்வாள் குலசை முத்தாரம்மன்…

Read Time:11 Minute, 14 Second

திருச்செந்தூர் அருகே குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் கடற்கரையோரம், ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்து பக்தர்களை காத்து வருகிறாள் அன்னை முத்தாரம்மன்.

ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன்

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் மன்னன் குலசேகரப்பாண்டியனுக்கு அன்னை முத்தாரம்மனாகக் காட்சி தந்து அருளியதாக வரலாறு.

பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசை திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு குறைவில்லாத வாழ்வை அருள்கிறாள். சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார்.

அரக்கனை வதம் செய்ததால் முத்தாரம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. தோஷம் விலக முத்தாரம்மன் கடற்கரையோரம் இருந்த வனத்தில் சிவனை நோக்கி தவம் இருந்தாள். முத்தாரம்மனின் தவத்தை மெச்சிய சிவன் தேவியின் வேண்டுகோளுக்கிணங்கிய முத்தாரம்மனுடன் ஒருசேர அமர்ந்தார். இதனால் மனம் மகிழ்ந்தார் முத்தாரம்மன். சிவனிடம் நான் வேண்டுகிற பொழுது என்னுடன் இணைந்திருந்து என்னை நாடி வரும் அன்பர்களுக்கு தாங்கள் அருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள் அம்மன்.

அதனாலேயே இத்தலத்தில் சிவன் அருஉருவினராக, ஞானமூர்த்தீஸ்வரர் என்ற நாமத்துடன் முத்தாரம்மையோடு வீற்றிருக்கிறார்.பின்னர் முத்தாரம்மன் வீரைவளநாட்டில் (தற்போதைய குலசேகரப்பட்டினம்) ஓங்கி உயர்ந்த புற்றாக வளர்ந்து நின்றாள். பின்னர் மக்கள் அம்மனை தினசரி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாரி முத்தாரம்மன், உஜ்ஜயினி மாகாளி, மும்முகக்காளி, வண்டி மறித்த காளி என்னும் 7 காளிகளுடன் முதன்மை பெற்ற சுயம்புவாய் அன்னை முத்தாரம்மனுடன் சேர்ந்து அஷ்டகாளிகள் குடிகொண்ட ஊர் என்பது சிறப்பாகும்.

கனவில் தோன்றிய அம்மன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மயிலாடி சிற்பி சுப்பையா ஆச்சாரி வீட்டிற்கு அதிகாலை கனவில் ஓர் ஆணும் பெண்ணும் சர்வாபரணங்களுடன் வந்து, உயர்ந்த மனைப்பலகையில் ஒருசேர தம்பதிகளாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒரு பாறையில் தங்களைக் கல்லில் வடித்து குலசையில் இருந்துவரும் பெரியோர்களிடம் கொடுக்க சொல்லி மறைந்து போயினர். கனவில் கடவுள் இட்ட கட்டளைப்படி சிற்பி பீடம் முதல் துவங்கி சிலை செய்தார்.

இதுபோன்று குலசை அர்ச்சகர் கனவில் முத்தாரம்மன் தோன்றி ‘எனக்கும், சுவாமிக்கும் சிலை செய்து வைத்திருக்கிறான் எனது பக்தன். நான் சொல்லும் அடையாளத்தை சொல்லி அவனிடம் சென்று கேள். பொன், பொருள் எதுவும் கேட்காமல் சிலையை தந்து, உன்னுடன் வந்து நிலையம் கொள்ள செய்வான். அதன்பின் என்னை பூஜித்துவா, உன்னையும், என்னை முழுமையாக நம்பி வழிபடும் அன்பர்களுக்கும் எல்லா வளமும், நலமும் அளித்து காப்பேன்’ என்றாள்.

குலசை ஊரார் மயிலாடி சென்று முழுச் சிலையை எடுத்து வந்து சுயம்பு அம்மனுக்கு பின்புறம் வைத்தவுடன் அளவெடுத்து செய்த சிலைபோல ஒரு செவ்வாய்க்கிழமையில் அழகாக அமர்ந்தது. முத்தாரம்மன் அருள்மிகு ஞானமூர்த்தியாருடன் அம்மை அப்பனாக காட்சி தர, குடமுழுக்கும் நடந்தேறியது. கருவறையில் அம்பாளுக்காக இறைவன் ஞானமூர்த்தீசராக கையில் செங்கோலும் இடக்கையில் விபூதி மடலுடன் கரங்களுடனும் காட்சி தருகிறார். முத்தாரம்மன் நான்கு கரங்களுடன் உலகை உருவாக்கி, காத்து ரட்சித்து மறைத்து, அருளும் அனைத்துப் பணிகளையும் இங்கு மேற்கொண்டிருக்கிறாள்.

ஞானமூர்த்தீஸ்வரரின் பணிகளையும் முத்தாரம்மனே செய்வதால், இங்கு அம்பாளும் ஞானமூர்த்தீஸ்வரரும் பரிவர்த்தனை யோக நிலையில் உள்ளனர். முதலில் கோவில் ஓலைக்கூரையால் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஆலயத்தின் தல மரம் வேம்பு.

தசரா விழா

இக்கோவிலுக்கு வார செவ்வாய்க்கிழமைகள் முக்கியமான நாள்களாகும். ஒவ்வொரு தமிழ்மாதம் கடைசிச் செவ்வாய் இரவில் திருத்தேர் உலா நடைபெறுகிறது. ஆடிமாதம் 2-வது செவ்வாய் முளையிடு விழாவும்; 3 -வது செவ்வாய் கொடை விழாவும்; அடுத்த புதன்கிழமை அம்மனுக்கு மஞ்சன நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலைப் பொறுத்தவரை தசரா திருவிழாவே முக்கியமானதாகும்.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக, தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் ஆண்டுதோறும் பிரமாண்ட தசரா விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவன், கிருஷ்ணன், காளி உள்ளிட்ட வித, விதமான வேடத்தில் வலம் வந்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். நவராத்திரி 10-ம் நாள் விஜயதசமி அன்று மகிஷனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினாள். இதை நினைவுகூரும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.

வரமுனி அகத்தியர் இட்ட சாபத்தால் எருமை தலையும் மனித உடலுடன் கொண்ட மகிஷாசுரன் வேள்வி செய்து வரம் பெற்றான். முனிவர்களுக்கு பல இடையூறுகளை செய்து வந்தான். முனிவர்கள் அம்பிகையை வேண்டினர். அவள் வேள்வி நடக்கும் இடத்தினை சுற்றி மாய அரண் ஒன்றை உருவாக்கினாள். முனிவர்களும் வேள்வியை தொடர்ந்து நடத்தினர். இறுதியில் ஒரு பெண் குழந்தையாய் ஆதிபராசக்தியே புரட்டாசி அமாவாசை திதியன்று அவதரித்தாள். அக்குழந்தைக்கு லலிதாம்பிகை எனப்பெயரிட்டனர்.

நவராத்தியின் 9 நாள்களிலும் வளர்ந்த லலிதாம்பிகை 10 -ம் நாள் பராசக்தி வடிவம் தாங்கி மகிஷாசுரனை வதைக்கப் புறப்பட்டாள். அவ்வாறு மகிஷாசுரனை அழித்த 10 -ம் நாளே இத்திருக்கோயிலில் தசரா நாள் என அழைக்கப்படுகிறது.

10-ம் நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். சூலத்திற்கு மகா அபிஷேகம் நடந்து இரவு 12.00 மணிக்கு கடற்கரையில் இருக்கும் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலை அம்பாள் அடைவாள். பிரார்த்தனையாக வேஷம் கட்டியவர்கள் அன்னையுடன் அணிவகுத்து செல்வார்கள். முதலில் மகிஷாசுரன் தலை, பின்னர் சிம்மத்தலை, அடுத்து எருமை தலை 4 ஆவதாக கோழித்தலை ஆகியவற்றை கொய்து வெற்றி வாகை சூடிய பின்பு வாணவேடிக்கை நடந்து திருத்தேரில் திருக்கோயிலுக்கு மேளதாளம் முழங்கத் திரும்பி வருவாள். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள்.

மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

திருமஞ்சணை பிரசாத மகிமை

குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும்.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரத்தில் குலசேகரன்பட்டினம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி வரையில் ரெயிலில் சென்று பின்னர் பஸ் அல்லது கார்களில் கோவிலுக்கு செல்லலாம். திருநெல்வேலிக்கு சென்னையில் இருந்து தினமும் 6 ரெயில்கள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலசை கோவிலுக்கு திருச்செந்தூர் சென்று செல்லலாம். திருநெல்வேலியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. குலசை சென்று அன்னையை வழிப்பட்டு அவளின் ஆசியை பெறுவோம்…