சபரிமலை பக்தர்கள் போராட்டம் எதிரொலி, இரண்டு பெண்களை திருப்பி அனுப்பியது கேரள அரசு

Read Time:6 Minute, 20 Second

சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களையும் திரும்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.

அய்யப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐப்பசி மாத பூஜைக்காக புதன்கிழமை மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் மலை அடிவாரமான நிலக்கல்லில் பக்தர்கள் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இளம் பெண்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் இறக்கிவிட்டனர்.

செய்தியார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண் பக்தர்களையும், செய்தியாளர்களையும் செல்ல விடாமல் தொடர்ந்து வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நேரிட்ட மோதல் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பக்தர்கள், அவர்களை அனுமதிக்காத வண்ணம் தடுப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே போலீஸ் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

திருப்பி அனுப்ப உத்தரவு

ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் ஆந்திர பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா இன்று சபரிமலைக்கு செல்ல முயற்சியை மேற்கொண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை சென்றடைந்தனர். இருவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். இருவரும் சன்னிதானத்திற்கு வருவதை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் அங்கு போராட்டம் மேற்கொண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். இருப்பினும் அய்யப்ப பக்தர்கள் பெண்களை பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறிவிட்டனர்.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் கேரள மாநில அரசு அவர்களை திருப்ப அனுப்ப உத்தரவிட்டது.

கேரள மாநிலத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்தரன் வெளியிட்ட அறிக்கையில், அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே. சமூக செயற்பாட்டாளர்களுக்கு கிடையாது. எனவே, போராட்டக்காரர்களுக்கும், செயற்பாட்டாளர்களும் ஒரு வேண்டுகோள். சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. சபரிமலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங்களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம்.

சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களில் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொருவர் பத்திரிகையாளர். சபரிமலை விஷயம் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெவித்தார். “பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னதாக யாரென்பதை போலீஸ் அடையாளம் காண வேண்டும்,” என அமைச்சர் சுரேந்தரன் உத்தரவிட்டார்.

போராட்டத்திற்கு தந்திரி ஆதரவு

சன்னிதானத்தை நெருங்கிய இரண்டு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் சன்னிதானம் அருகே சரணகோஷம் எழுப்பினர். 18-ம் படியின் கீழ் அர்ச்சகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பக்தர்களின் இப்போராட்டத்திற்கு தந்திரி தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு பேசுகையில், ”கோயிலைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளோம். அய்யப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்

இதற்கிடையே கொச்சியில் சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவின் வீட்டில் மர்மநபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவருடைய வீட்டில் கற்கள் வீசப்பட்டது.

“பெண்ணியவாதி ரஹானாவிற்கு போலீஸ் சீருடை வழங்கப்பட்டுள்ளது, இது முற்றிலும் தவறானது. சபரிமலை சுற்றுலாப் பகுதி கிடையாது. பக்தர்கள் மட்டுமே அங்கு செல்ல வேண்டும். கேரள போலீஸ் தவறான செயலை மேற்கொள்கிறது,” என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.