காற்று மாசுபாடு உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது!

Read Time:4 Minute, 20 Second

காற்று மாசுபாடு உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்பதை சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.

உலகம் முழுவதும் சமீபகாலமாக அதிக அளவில் மனிதர்களை தாக்கும் நோய் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிதல் நோய். எலும்பு மெலிதல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக, வருடந்தோறும் அக்டோபர் மாதம் 20-ம் தேதி ‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினமாக அனுசரிக்கபடுகிறது. எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. சனிக்கிழமை ‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் வெளியான ஆய்வு முடிவில் காற்று மாசுபாடு உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.

ஆரம்பகாலத்திலே நோயறிதல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகியவை வாழ்க்கையின் பிற்பகுதியில் எலும்பு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

“எலும்பு நோய்கள் மற்றும் அவைகளின் அறிகுறிகளை மோசமடைய செய்வதற்கு காற்று மாசுபாட்டிற்கு தொடர்புள்ளது. வாகன மற்றும் தொழில்துறை உமிழ்வுகளிலிருந்து அடிக்கடி வெளிப்படும் காற்று மாசுபாட்டால் முதியவர்கள் வேகமாக எலும்பு பலவீனத்தை அனுபவிக்கிறார்கள், இதனால் எலும்பு முறிவுகள் அதிகமாகும். எனவே, உங்கள் எலும்புகளுக்கு மோசமான காற்று கேடு விளைவிப்பதாகும்,” என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வற்ற வேலைப்பளு, நேரமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் எடுத்துகொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக சொற்பமே. ஏன் இல்லை என்றே சொல்லலாம். தொடர் உடற்பயிற்சிகள் நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

மருந்து உண்டா?

நோயை முற்றிலுமாக தீர்க்க எந்த மருந்தும் கிடையாது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை குறைக்க நிவாரணி மட்டுமே உள்ளது. இந்த நோய் வந்தவர்கள் அதிக எடைகளை தூக்கக் கூடாது. கடினமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. மருத்துவர் ஆலோசனைபடி சிறு சிறு எளிய பயிற்சிகளை செய்து வரவேண்டும். கால்சியம் அதிகளவில் எடுத்துகொள்ள வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்த அளவு தினமும் உண்ண வேண்டும். தினமும் சூரிய ஒளி உடலில் படுமாறு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். புகை பிடித்தல் மற்றும் அதிகமான மது அருந்துவதை தவிருங்கள், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கால்சியம் நிறைந்த கீரை வகைகள், காய்கறிகள், தானியங்கள், உணவு முறைகளில் கட்டுப்பாடு, சூரிய ஒளியின் முக்கியத்துவம் உணர்ந்து உடலில் சூரிய ஒளி படும்படி சிறிது நேரம் நடக்கும் உடற்பயிற்சிகள் இது போன்ற சின்ன சின்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த எலும்புகளில் ஏற்படும் குறைபாட்டை தடுத்து கொள்ளவும், நோயின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்து கொள்ள பெரிதும் உதவுகிறது. உடலின் எலும்புகளைப் பலவீனமாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை விரட்டி அடிக்க இன்றே உறுதி எடுப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழியாகும்.