பணியிடங்களில் பாலியல் தொல்லை வழக்குகள் 4 வருடங்களில் 4 ஆயிரம் சதவிதம் உயர்வு

Read Time:5 Minute, 26 Second

பணியிடங்களில் பாலியல் தொல்லை வழக்குகள் 4 வருடங்களில் 4 ஆயிரம் சதவிதம் உயர்ந்துள்ளது.

பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, மற்றும் குறைதீர்ப்பு) சட்ட மசோதா 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான நீதி கிடைத்தல் ஆகியவற்றிற்கு வழி செய்கிறது. 1990-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அரசு ஊழியரான பன்வாரிதேவி என்ற பெண், பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த பெண்ணின் கொலைக்கு நியாயம் கேட்டு, ராஜஸ்தானை சேர்ந்த ‘விசாகா’ என்ற மகளிர் அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர்.

அதை அடிப்படையாக வைத்து பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை விசாரிக்க ‘விசாகா குழு’ அமைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் கட்டாயம் இந்த குழு அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2013-ம் ஆண்டு இது சட்டமாக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான நிறுவனங்களில் இது அமைக்கப்படவில்லை அல்லது முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது.

மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பணியிடங்களில் நேரிட்ட கொடூரங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் இப்பிரசாரம் மூலம் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. மத்திய அமைச்சர் முதல் திரையுலக நட்சத்திரங்கள் வரையில் இதில் சிக்கிவருகிறார்கள். 20 பத்திரிக்கையாளர்கள் கொடுத்த புகார்கள் காரணமாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகினார். இன்னும் பெண்கள் தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே பணியிடங்களில் பாலியல் தொல்லை வழக்குகள் 4 வருடங்களில் 4 ஆயிரம் சதவிதம் உயர்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை தொடர்பாக 2014-ம் ஆண்டு 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2018-ல் அக்டோபர் வரையில் 14,866 ஆக உயர்ந்துள்ளது. வழக்குப்பதிவு எண்ணிக்கையானது 3,907 சதவிதம் உயர்ந்துள்ளது. 2018-ல் அதிகப்பட்சமாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் 8,462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக டெல்லியில் 1,495 புகார்களும், அரியானாவில் 908 புகார்களும், ராஜஸ்தானில் 647 புகார்களும், பீகாரில் 555 புகார்களும், மராட்டியத்தில் 448 புகார்களும், மத்திய பிரதேசத்தில் 409 புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் கர்நாடகம் மோசமாக உள்ளது. அங்கு 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 2017-ம் ஆண்டில் குறைந்த அளவு பெண்களே பணியிடங்களில் நேரிட்ட பாலியல் தொல்லை தொடர்பாக புகார்களை கொடுத்துள்ளார். அப்போது 570 பெண்கள் புகார்களை கொடுத்துள்ளார்கள் என அரசு தகவல்கள் தெரிவிக்கிறது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு புகார்கள் அதிகரிப்புக்கு அரசு மற்றும் மேனகா காந்தியால் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கலாம், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிகையின் பலனாகும் என தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கூறியுள்ளார். பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் புகாரளிப்பதற்கான இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் புகாரளிப்பதற்கான இணையதளத்தை மத்திய அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்கியது. மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இணையதளத்தை தொடங்கி வைத்தார். நிறுவனங்களில் அமைக்கப்படும் கமிட்டிகளின் மீது நம்பிக்கையில்லாத பெண்கள் மத்திய அரசின் இணையதளத்திற்கு புகாரை அளிக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.