“சிலரது பெயர்கள் அதிர்ச்சியளிக்கிறது” #METOO விற்கு ஏ.ஆர். ரகுமான் ஆதரவு

Read Time:4 Minute, 9 Second

#METOO விற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஏ.ஆர். ரகுமான் “சிலரது பெயர்கள் அதிர்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.

#METOO மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பணியிடங்களில் எதிர்க்கொண்ட பாலியல் தொல்லைகளை வெளியே கொண்டு வருகின்றனர். தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை சுமத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்மயி போன்று பல பெண்களும் அவருக்கு எதிராக பாலியல் தொல்லை புகாரை சுமத்தி வருகின்றனர். ஆனால் இதுபோன்று வைரமுத்துவால் பாதிக்கப்பட்டோம் என்பவர்களுக்கு திரையுலகில் இருந்து பெரிதாக ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. பெரும்பாலானோர் அமைதியையே காத்து வருகிறார்கள்.

சின்மயி விவகாரத்தில் நட்சத்திரங்கள் என்ற வரிசையில் நடிகை சமந்தா, வரலட்சுமி சரத்குமார், சித்தார்த் உள்ளிட்ட சிலபெயர்தான் வெளிப்படையாக ஆதரவை தெரிவித்தார்கள். வேறு யாரும் வெளிப்படையாக பேசவில்லை.

இந்தநிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏர்.ரகுமானின் தங்கை ஏ.ஆர்.ரைஹானாவும், வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்பதுபோல கருத்து தெரிவித்தார். ஏ.ஆர்.ரைஹானா பேசுகையில், “வைரமுத்து பற்றி பல பெண்கள் என்னிடம் சொன்னார்கள். அது திறந்த இரகசியம். பலர் அதை எதிர் கொண்டுள்ளனர். நான் கவுரவமான முறையில் நடந்துகொள்கிறேன், ஏனெனில் நான் அப்படிப்பட்ட விஷயங்களை சந்திக்கவில்லை. அவர்களில் பெரும்பாலோர் இத்தகைய வழக்கில் என்னிடம் பேசுவதற்கு பயப்படுகிறார்கள்,” என்றார்.

துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் அதைப் பற்றி புகாரளிக்க வேண்டும், இது நீதிமன்றம் சார்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான்

இதனையடுத்து #METOO விற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஏ.ஆர். ரகுமான் “சிலரது பெயர்கள் அதிர்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ #METOO பிரசாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நம்முடைய சினிமா துறை பெண்களுக்கு அதிக மரியாதை மற்றும் அதிகாரம் அளிப்பதாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேரிட்டதை வெளியே கொண்டுவர மேலும் வலு கிடைக்க வேண்டும். நானும், என்னுடைய குழுவும் தங்களிடம் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலையே எப்போதும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுவதற்கு சமூக வலைதளங்கள் சுதந்திரம் வழங்கியுள்ளது. இப்போதைய இன்டர்நெட் நீதிவழங்கல் முறையை உருவாக்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தவறாக பயன்படுத்திவிடக்கூடாது,” என்று கூறியுள்ளார். ஏ.ஆர். ரகுமானின் ஆதாரவு சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களிடம் இருந்து மிகவும் மோசமான தாக்குதலை எதிர்க்கொண்டுள்ள சின்மயிக்கு பெரும் பலமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. அவருடைய ஆதரவுக்கு சின்மயி கண்ணீருடன் நன்றியை பதிவு செய்துள்ளார்.