10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

Read Time:3 Minute, 47 Second

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் உலக சாதனையைப் படைத்தார்.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ‘அசைக்க முடியாத’ வீரராக விராட் கோலி அதிரடி காட்டினார். விராட் கோலி (129 பந்துகள்)157 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலி 81 ரன்கள் எடுத்த போது, அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது. இதனால், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் உலக சாதனையைப் படைத்தார். உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 13–வது வீரர் கோலி ஆவார்.

சச்சின் தெண்டுல்கர் தனது 10 ஆயிரம் ரன்களை 259 இன்னிங்ஸில் எட்டிய நிலையில், விராட் கோலி 205-வது இன்னிங்ஸில் எட்டினார். சச்சினைக் காட்டிலும் 54 இன்னிங்ஸ்கள் முன்கூட்டியே கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். தெண்டுல்கர் வசம் 17 ஆண்டுகளாக இருந்த இந்த சாதனையை கோலி தட்டிப்பறித்துள்ளார். 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கோலி 10,813 பந்துகளை சந்தித்து இருக்கிறார். இதுவும் ஒரு சாதனை தான். இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா 11,296 பந்துகளில் இந்த ரன்களை எட்டியதே முந்தைய சிறப்பானதாக இருந்தது.

இதுபோக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த சாதனையாளராகவும் கோலி உருவெடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக கோலி 29 ஆட்டங்களில் ஆடி 6 சதம் 9 அரைசதங்கள் உள்பட 1,684 ரன் எடுத்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 2–வது இடத்துக்கு (39 ஆட்டத்தில் 1,573 ரன்) தள்ளப்பட்டார்.

விராட் கோலி இந்த போட்டியில் 115 ரன்களை எட்டியபோது, 2018-ம் காலண்டர் ஆண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். ஆயிரம் ரன்களை 11 இன்னிங்ஸி்ல் எட்டியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் கோலி ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 6–வது முறையாகும். இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் (7 முறை) முன்னணியில் இருக்கிறார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் விராட் கோலியின் சாதனைகள் தொடரட்டும்.

10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் விபரம்:-

விராட் கோலி: 205 இன்னிங்ஸ்

சச்சின் தெண்டுல்கர்: 259 இன்னிங்ஸ்

சவுரவ் கங்குலி: 263 இன்னிங்ஸ்

ரிக்கி பாண்டிங்: 266 இன்னிங்ஸ்

ஜாக் காலிஸ் : 272 இன்னிங்ஸ்

எம்.எஸ்.தோனி : 273 இன்னிங்ஸ்

பிரையன் லாரா: 278 இன்னிங்ஸ்

ராகுல் திராவிட் : 287 இன்னிங்ஸ்

தில்ஷன் : 293 இன்னிங்ஸ்

சங்கக்காரா: 296 இன்னிங்ஸ்

இஞ்ஜமாம் உல் ஹக்: 299 இன்னிங்ஸ்

சனத் ஜெயசூரியா: 328 இன்னிங்ஸ்

மகேலா ஜெயவர்தனே: 333 இன்னிங்ஸ்

ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் கிளப்பில் உள்ளனர்.