சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத் (குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர். படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும்.
சர்தார் படேலின் 143-வது பிறந்த தினமான அக்டோபர் 31-ல் இந்த பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சர்தார் வல்லபாய் படேல் சிலையின் பெயர் பலகையில் ‘ஸ்டேச்சு ஆப் யூனிட்டி’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் கீழே ‘ஸ்டேச்சு ஆப் யூனிட்டி’ என்ற வார்த்தை பிரஞ்சு, கிரீக், அரபிக், இந்தி, தமிழ், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. தமிழில் ‘ஒற்றுமை சிலை’ என்பதற்கு பதிலாக ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முதுபெரும் மொழிகளில் ஒன்றான தமிழை கொச்சைப்படுத்தி உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதை சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர். “ரூ. 3000 கோடியில் நிறுவப்பட்ட ஒரு சிலை அருகே சரியான தமிழில் கூட பெயர்ப் பலகை வைக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பினர். ஒருவேளை நீட் வினாத்தாளை மொழி பெயர்த்தவர்தான் ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று மொழிப்பெயர்த்தாரா? என்றும் நெட்டிசன்கள் கேலியாக கேள்வியை எழுப்பினர்.
மத்திய அரசைவிட கூகுள் மொழிப்பெயர்ப்பு சரியாக உள்ளது எனவும் டுவிட்டர்வாசிகள் விமர்சனம் செய்தனர்.
இதற்கிடையே அப்படி ஒரு பலகையே அங்கே வைக்கப்படவில்லை, வெறும் போட்டாஷாப் வேலை என்றும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் செய்தி இணையதளங்களில் வெளியான புகைப்படங்கள் அனைத்தும் அதனை உறுதி செய்யும் வகையிலே உள்ளது. பிபிசி குஜராத்தி செய்தியாளர் தேஜஸ் வைத்யா சிலையை சுற்றிலும் எடுத்த பல படங்களில் தவறான மொழி பெயர்ப்புடன் கூடிய பலகையும் இடம்பெற்றுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. குஜராத் முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட புகைப்படத்திலும் இந்த பலகை இடம்பெற்றது. விமர்சங்கள் எழுந்ததும் அப்பதிவு டுவிட்டரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
“சிலையை சுற்றி இருக்கும் அறிவிப்புப் பலகைகள் எல்லாவற்றையும் லார்சன் & டூப்ரோ நிறுவனமே தயாரித்தது. சமூக ஊடகங்களில் அது பற்றிப் பேசப்படும் கருத்துகளை அடுத்து அந்த நிறுவனத்துடன் பேசினோம். அதை அகற்றிவிட்டதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தப் புகைப்படம் இரண்டு நாள்கள் முன்பு எடுக்கப்பட்டது. எனினும் அந்தப் பலகை அகற்றப்படாமல் இருந்தால் நாங்கள் உடனடியாக அகற்றிவிடுவோம்” என்று அதிகாரிகள் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பிற மொழிகளின் மொழிப்பெயர்ப்பில் தவறு உள்ளது எனவும் விமர்சனம் எழுந்தது.
பெயர் பலகை சர்ச்சைகள் எழுந்த நிலையில் அப்பலகை அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெயர்ப் பலகையில் ‘Statue of Unity’ என்று தமிழில் எழுதப்பட்டதில் பிழை இருந்தது உண்மைதான் என சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.