ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தொகை ரூ.3.6 லட்சம் கோடியை கேட்கும் மத்திய அரசு!

Read Time:11 Minute, 58 Second

ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தொகையில் ரூ.3.6 லட்சம் கோடியை கேட்டு மத்திய அரசு நெருக்குதல் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. வங்கிகளை ஆர்பிஐ முறையாக கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்காததே வாராக்கடன் அதிகரிக்க காரணம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம்சாட்டினார். ஆனால், ஆர்பிஐ-க்கு போதுமான அதிகாரங்கள் இல்லை என்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் அதற்கு பதிலளித்தார். இதனிடையே, ஆர்பிஐ-யின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்று ஆர்பிஐ துணை கவர்னர் விரல் வி.ஆச்சார்யா குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு – ஆர்பிஐ இடையே மேலும் பல விஷயங்களில் கருத்துவேறுபாடுகளும், மோதல் போக்கும் நிலவி வருகின்றன. ஆர்பிஐ சட்டப் பிரிவு 7-இன்படி ஆலோசனை நடத்த ஆர்பிஐ கவர்னருக்கு மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. ஆர்பிஐ சட்டப் பிரிவு 7-இன்படி மத்திய அரசு நோட்டீஸ் அளிக்கும்போது, ஆர்பிஐ ஆளுநருடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஆர்பிஐ எவ்வாறு செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. மிகவும் முக்கியமான தருணங்களிலும், பொது நலன் கருதியும் இந்த பிரிவை மத்திய அரசு கையாள முடியும்.

இந்திய வரலாற்றில் இப்போதுதான் மத்திய அரசு முதல்முறையாக இந்த சட்டப் பிரிவின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் மத்திய அரசு விமர்சனத்திற்குள் சிக்கியது.

ரூ.3.6 லட்சம் கோடி

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தொகையில் ரூ.3.6 லட்சம் கோடியை கேட்டு மத்திய அரசு நெருக்குதல் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தினை போக்கும் விதமாக விதிமுறைகளை தளர்த்துவது, வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிப்பது மற்றும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பை மாற்றிக் கொள்வது உள்ளிட்ட விவகாரங்களில் ரிசர்வ் வங்கிக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த விவகாரங்களில் ரிசர்வ் வங்கிக்கு மாற்று கருத்து உள்ளதால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படவில்லை எனில் இந்தியா மோசமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முடிவு எட்டப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஈவுத் தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உபரியாக இருக்கும் ரூ.3.60 லட்சம் கோடியை தருமாறு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த பணத்தின் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் தற்போதைய இருப்புத் தொகையை அப்படியே பராமரித்தால்தான் நிதிநிலை ஸ்திரமாக இருக்கும் என கூறியுள்ளது.

தவிர ரிசர்வ் வங்கி வாராக்கடன் வசூலிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது. வாராக்கடனால் மோசமாக பாதிக்கப்பட்ட வங்கிகள் மீது பிசிஏ (Prompt Corrective Action ) விதிமுறைகள்படி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வாராக்கடன் கடனாளிகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. இந்த நிலையில் கடன் வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகளின் விதி முறைகளை எளிதாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது என்று அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

வீரல் ஆச்சார்யா பொது நிகழ்ச்சியில் அரசை விமர்சித்த நிலையில், ரிசர்வ் வங்கி யின் தனிப்பட்ட விவகாரங்களை பொது நிகழ்ச்சியில் பேசியது குறித்து இயக்குநர் குழுவில் இருக்கும் நியமன இயக்குநர் குருமூர்த்தி கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள இயக்குநர் குழு கூட்டத்தில் உர்ஜித் படேல் பதவி விலகும் முடிவில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆர்பிஐ-யின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன், அமைப்புரீதியாக ஆர்பிஐ-க்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரமும், சுயநிர்வாக உரிமைகளும் கட்டாயம் மதிக்கப்பட வேண்டும். ஆர்பிஐ என்பது காரில் உள்ள சீட் பெல்ட் போன்றது. மத்திய அரசு எனும் ஓட்டுநர் அதனை முறைப்படி அணியாவிட்டால், விபத்து ஏற்படும்போது பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து அரசுகளும் முன்னுரிமை அளிக்கும் என்பது உண்மைதான். அதே நேரத்தில், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு ஆர்பிஐ கூறும் வழிகளுக்கு உள்பட்டுதான் நிதி சார்ந்த விஷயங்களில் மத்திய அரசு செயல்பட முடியும். அரசு அதனை மீறி செயல்பட முயற்சிக்கும்போது, நாட்டில் நிதி மற்றும் பொருளாதார ரீதியிலான ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேண வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆர்பிஐ-க்கு உண்டு. எனவேதான், மத்திய அரசு மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள ஆர்பிஐ மறுக்கிறது. ஆர்பிஐ கவர்னர், துணை கவர்னர்கள் ஆகியோரை ஒருமுறை நியமித்துவிட்டால், அவர்களின் ஆலோசனைப்படிதான் மத்திய அரசு நடக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் அரசு மற்றும் நாட்டின் நிதி நிலைக்கு பாதுகாப்பு கவசம் போன்றவர்கள். நாட்டின் வங்கித் துறையை பாதுகாப்பது என்பதும் ஆர்பிஐ-யின் முக்கிய நோக்கம். பிறர் நலன்களை கருதி ஆர்பிஐ எப்போதும் செயல்படாது.

இந்தியாவில் இப்போது பணவீக்கம் பிரச்னை சிறப்பாகவே சமாளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பெருமை ஆர்பிஐ மற்றும் மத்திய அரசைச் சாரும். இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்க வேண்டியதும் அவசியம் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையிலான மோதலை விமர்சனம் செய்யும் காங்கிரஸ், பொருளாதாரத் தவறுகளை சரி செய்ய ஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு தங்களுடைய தவறான பொருளாதார கொள்கைகளாலும், முடிவுகளாலும் மத்திய அரசு நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டது. இப்போது, அதனைச் சமாளிப்பதற்காக ரூ.3.6 லட்சம் கோடியை ஆர்பிஐ அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது ஆர்பிஐ வைத்துள்ள ரொக்க இருப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். இப்படி ஆர்பிஐ-யிடம் இருந்து கட்டாயப்படுத்தி பணத்தைப் பெற நினைப்பதால்தான் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே பிரச்னை ஏற்படுள்ளது.

மத்திய அரசு தவறான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டு, அதனை சரி செய்ய ஆர்பிஐ பணத்தை கோருவது எத்தகைய முடிவு என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஆர்பிஐ கவர்னர் துணிவுடன் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அவர் தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி பேசுகையில், ஆர்பிஐ-யின் பண இருப்பில் கைவைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது முன்பு எந்த அரசும் மேற்கொள்ளாத ஒரு நடவடிக்கை. இது தவறானது என்பதால்தான் ஆர்பிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மத்திய அரசு சீர்குலைத்துவிட்டது. மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தங்களது தவறான பொருளாதார நடவடிக்கைகளின் மோசமான விளைவுகள் மக்களுக்கு முழுமையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதனை மூடி மறைப்பதற்காகவும் ஆர்பிஐ-யிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ஆர்ஜெண்டீனாவில் பொருளாதார நிலை எவ்வளவு மோசமானது என்பதில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆர்பிஐ-யிடம் போதுமான அளவுக்கு பண இருப்பு இருக்க வேண்டும் என்பது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் மத்திய அரசு அடிமடியிலேயே கைவைக்க முயற்சிக்கிறது என்றார்.