கார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்…

Read Time:10 Minute, 32 Second

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப்பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப்பெற்றுள்ளது என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.

புராண நூலின் படி இதன் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை .ஸ்ரீநரசிம்ம பெருமாள் பிரகல்லாதன் முதலிய அடியவர்களுக்கு கடிகை மாத்திரைப்பொழுதில் இம்மலை மீது யோக சமாதியில் காட்சியளித்து முக்கியளித்ததால் கடிகாசலம் எனப்பெயர் பெற்றது.

பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர். அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் எனும் இத்தலத்தில் சாய்ந்த நிலையில், யோக முத்திரையோடு தியானக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

யோக நரசிம்மர் 

ஒரு கடிகை நேரம் (24 நிமிடங்கள்) சோளிங்கபுரத்தில் தங்கியிருந்தாலே எத்தகைய பாவியானாலும் முக்தி தரும் திருத்தலமாக விளங்குவதால் சோளிங்கபுரத்திற்கு கடிகாசலம் (திருக்கடிகை) எனும் பெயர் ஏற்பட்டது. விஸ்வாமித்திரர் ஒரு கடிகை நேரம் சோளிங்கபுரத்து யோக நரசிம்மரைத் துதித்து, அதன் பயனாக பிரம்மரிஷி பட்டத்தையும் பெற்றார்.

இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனி என்னும் நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப்பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழசிம்மபுரம் என அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரிய மலை என்னும் மலைக்கோயிலில் யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் காட்சி தருகிறார். பெரிய மலையின் உச்சியில் வடக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனைக் கடந்தால் சாளக்கிராம மாலை அணிந்து மூலவராய் யோக நரசிம்மர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலித்து வருகிறார். உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு (வாத்சல்யத்தோடு) அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறது. உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவராதலால் பக்தோசிதப்பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். தனிக்கோயில் நாச்சியாராக அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார்.

உலக உயிர்களைக் காப்பதற்கு உரியமுறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். இத்தலத்தின் உற்சவர் தாயார் திருநாமம் சுதாவல்லி. தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும்; பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

அனுமனுக்கு தனி சன்னிதி

ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர். ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார்.

இரு அரக்கர்களின் தலையையும் சுதர்சனத்தை ஏவி கொய்து ரிஷிகளுக்கு உதவினார். ரிஷிகளின் தீவிர தவத்தை மெச்சிய பகவான் தவம் செய்த முனிவர்களுக்கு யோக பட்டம் கட்டிய யோக நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி கொடுத்தார். அத்திருவுருவத்தை தரிசித்த ரிஷிகளும் மிக மகிழ்ந்து, தங்களை இந்த திருக்கோலத்திலேயே எப்போதும் இங்கு வந்து தரிசிக்கும் பேற்றினை எங்களுக்கு அருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நரசிம்மப்பெருமாளும் ஒப்புக்கொண்டு அங்கே நிஷ்டையில் யோக நரசிம்மராக அருள் செய்து வருகிறார்.

யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி இக்கோவிலில் இருக்கிறது. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம்.

பஞ்சாமிர்த பிரசாதம்

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந் நாத முனிகளும், மணவாள மாமுணியும், ராமானுஜரும், திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர். இந்த மலைக்கு எதிரில் உள்ள சிறிய மலையில் நான்கு திருக்கரங்களுடன் யோக ஆஞ்சநேயர் உள்ளார். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு மிகவும் உகந்தது.

வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கும், தாயாருக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அதை பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனை வாங்கி உண்டால், மிகுந்த செல்வம் கிடைக்கும். நோய்கள் அகலும்.

தரிசிக்கும் முறை

இங்கு தாயார், பெருமாள், பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். நம் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால், அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைக்க, நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவாராம். எனவே இந்த வரிசைப்படியே பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

தொட்டாச்சாரியார் எனும் பக்தர் வருடம் தோறும் காஞ்சீபுரம் வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம். முதுமை காரணமாக அவர் வரமுடியாத நிலையில் பெருமாளே இத்தலத்தில் காஞ்சீபுரம் கருடசேவை தரிசனத்தைக் காட்டி அருளியதாக கூறப்படுகிறது. சித்திரை உற்சவத்தின் 9 நாட்களும் மலையில் இருந்து நரசிம்மர் சார்பாக சக்கரத்தாழ்வார் இறங்கி, ஊருக்குள் வலம் வந்து திரும்பவும் மலைக்குச் செல்வார். அவ்வேளையில் சக்கரத்தாழ்வாரே, தரிசிக்கும் பக்தர்களின் துயரங்களை போக்கிடுவார்.

1500 படிகள் கொண்ட மலை

இத்தல நரசிம்மருக்கு வேண்டுதல் எதுவும் செய்யாமல் 1,500 படிகள் மலை ஏறிவந்து தரிசித்தாலே பலன் தரும் அதீத சக்தி உள்ளது.

முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக கூற்று நிலவுகிறது. பில்லி, சூன்யம், தீவினை, மனநோய், மனநிலை பாதிப்பு, மனக்குறை, மரண பயம் ஆகியவற்றால் துன்புறுபவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயரை தரிசித்தால் உடனடியாக துன்பங்கள் நீங்கப்பெறுவர் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். அதீத நோய்கள் தீர, இங்கே வந்து கார்த்திகை மாதம் மட்டுமில்லாமல் எப்போதும் விரதம் கடைப்பிடித்து தக்கான் குளத்தில் நீராடி, மலையேறி தரிசனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

கார்த்திகையில் கண் திறக்கும்

ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர், கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள்வதாக ஐதீகம். அதுவும் கார்த்திகை மாத வெள்ளி மற்றும் குறிப்பாக கார்த்திகை மாதத்து அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் யோக நரசிம்மர் யோக நிலை விடுத்து நமக்கு அருள்பாலிக்க கண் திறப்பார். சோளிங்கர் நரசிம்ம மூர்த்தியை தரிசித்து அருள் பெறுவோம். சென்னையிலிருந்து அரக்கோணம் ரெயில் நிலையம் சென்று அங்கிருந்து பேருந்துகள் மூலம் சோளிங்கரை அடையலாம்.