இன்னும் 10 நாட்கள்தான் இருக்கிறது… வடகிழக்குப் பருவ மழை சென்னையை வாழவைக்குமா? மீண்டும் வாட விடுமா?

Read Time:5 Minute, 0 Second

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரண்டு மழைக்காலங்கள் உள்ளது. இந்தியாவுக்கு தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று தென்மேற்கு பருவமழையை கொண்டுவருகிறது, வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று வடகிழக்குப் பருவமழையை கொண்டு வருகிறது. இந்திய தீபகற்பத்தின் தென் பகுதிக்கான பெரும்பான்மை மழை இந்த பருவ பெயர்ச்சிக் காலத்தில்தான் பெறப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஓராண்டுக்கான சராசரி மழையளவில் சுமார் 48% மழையளவு இந்த பருவத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியை விட 30 சதவீதம் வரை அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது. வழக்கமானதை விடவும் கூடுதலாக மழை பெய்யும் என்றும் வானிலை முன்னறிவிப்புகள் வெளியாகியது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் வரையில் நீடிக்கும். நவம்பர் மாதம் முழுவதும் மழை மாதமாக இருக்கும். இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. நவம்பர் 1-ம் தேதி தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.

ஆனால், சில நாட்கள் மட்டுமே மழை இருந்த நிலையில் மீண்டும் சென்னை உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டது.  கடந்த ஆண்டு பருவ மழை கைவிரித்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கோடை காலத்தை சிரமமாக கடக்க வேண்டியதானது. இந்நிலையில் கூடுதல் மழையிருக்கும் என வானிலை அறிவிப்புக்கள் வெளியானது மிகவும் ஆறுதலாக இருந்தது. ஆனால் சென்னையை பொறுத்தவரையில் அது காணல் நீர் போன்று சென்றுக்கொண்டிருக்கிறது. இதுவரையில் சொல்லும்படியாக மழை பெய்யவில்லை.

நவம்பர் மாதம் என்றாலே மழை மாதம்தான். வழக்கமாக இந்த மாதத்தில் 374.4 மி.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த மாதம் இதுநாள் வரை வெறும் 55 மி.மீ. மழைதான் சென்னையில் பதிவாகியுள்ளது. இன்னும் 10 நாட்கள்தான் இருக்கின்றன. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் சென்னைக்கு மழை வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

ஆனால், வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை அளவு 61% பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு நாள் மழை அதைப் பூர்த்தி செய்யுமா? இல்லை ஆறுதல் மட்டுமே தருமா? என்ற கேள்வியும் இருக்கிறது.

“சென்னைக்கு வழக்கமான அளவை விட குறைவான மழைதான் இதுவரை கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பற்றாக்குறை மழை என்பதை இவ்வளவு சீக்கிரம் கூறிவிட முடியாது. இன்றும், நாளையும் சென்னைக்கு மழை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை இன்றும் நாளையும் 150 மி.மீ. மழை அளவைப் பெற்று விடும் என்றும், ஒருவேளை அப்படிப் பெய்யவில்லை என்றால் மிகப்பெரிய பஞ்சத்தைக் காண நேரிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு போயுள்ளன. இன்றும் நாளையும் பெய்யும் மழை மட்டும் அவற்றை நிரப்பி விடாது. எனவே மேலுமொரு கனமழைக்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நிலையில் மாற்றம் ஏற்படும்.