பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகளுக்கு மோசமான பாதிப்பு மத்திய அரசு ஒப்புக்கொண்டது

Read Time:5 Minute, 33 Second

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகள் மோசமான பாதிப்பை எதிர்க்கொண்டனர் என மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

நிதிவிவகாரம் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகளை வாங்க முடியாத நிலைக்கும் மற்றும் அவர்களுடைய விளைப்பொருட்களுக்கு உரம், மருந்துக்களை வாங்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ‘‘கரையானை அழிக்க நாம் வி‌ஷம் கலந்த பூச்சி மருந்தை பயன்படுத்துகிறோம். அதே போல்தான் நாட்டிலிருந்து ஊழல் என்னும் நோயை ஒழிக்க கசப்பு மருந்ததாக பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை பயன்படுத்தினேன்’’ என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடி கசப்பு மருந்து என்று கூறியநிலையில்தான் மத்திய அரசின் அறிக்கையில், விவசாயிகள் மோசமான பாதிப்பை எதிர்க்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நிதி விவகாரங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய விவசாயத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம், மத்திய குறு, சிறு மற்றும் நடுரக தொழில் மேம்பாட்டு அமைச்சகம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

போதிய பணம் இல்லாமை

மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் கரிஃப் பயிர்களை விற்பனை செய்யும் அல்லது ரபி பயிர்கள் விதைக்கின்ற காலங்களில் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரு நடவடிக்கைகும் அதிகமான பணத்தேவை இருந்தது, ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது ரூபாய்களின் பயன்பாட்டை மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றியது. இந்தியாவில் 26.30 கோடி விவசாயிகள் ரொக்கப் பணத்தை மட்டும் நம்பியுள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகளை வாங்க முடியாத நிலைக்கும் மற்றும் அவர்களுடைய விளைப்பொருட்களுக்கு உரம், மருந்துக்களை வாங்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர். பெரும் விவசாய நில உரிமையாளர்கள் கூட, தங்கள் நிலங்களில் விவசாய பணிகளை மேற்கொண்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் பிரச்சனைகளை எதிர்க்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக தேசிய விதைகள் கழகத்தினால் (என்எஸ்சி) 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகளை விற்பனை செய்வதில் தோல்வியை தழுவியது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை விதைப்பொருட்களை வாங்க அரசு அனுமதியளித்தாலும் விற்பனையில் தோல்வியையே தழுவியது என குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி விவகாரங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியான கேள்வியை எழுப்பியது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தினேஷ் திரிவேதி, மத்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2017-ல் ஜனவரி-ஏப்ரல் மாதம் வரையில் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு இதனைக் கண்டுக்கொள்ளாதது ஏன்? என்று கேள்வியை எழுப்பியதாக செய்திகள் குறிப்பிடுகிறது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சககமோ பண மதிப்பிழப்பு நடவடிக்கையினை பாராட்டி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நடவடிக்கையால் வேலைவாய்ப்பு 1.22 லட்சத்தில் இருந்து, 1.85 லட்சமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகளின் துயரம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.