கஜா புயலை எதிர்த்து கம்பீரமாய் நிற்கும் பனை மரங்கள்!…

Read Time:7 Minute, 20 Second

வங்கக் கடலில் உருவான ‘கஜா’ புயல் வேதாரண்யம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் 15-ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் எப்படி சிதைந்தது என்பது மெல்ல, மெல்லத்தான் வெளியே தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் பெரும் உயிரிழப்பு தப்பினாலும், பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள இழப்பிலிருந்து எளிதில் மீள முடியாத பெரும் ரனத்தை மக்களுக்கு கஜா புயல் கொடுத்துவிட்டு சென்றுள்ளது. பசுமை கொஞ்சி விளையாடிய மரங்கள், உயிரற்ற சடலங்களாக வேரோடு பிடுங்கப்பட்டு, சடலங்களைப் போல கிடக்கின்றன.

லட்சக்கணக்கான தென்னைகள், வாழை மரங்கள், பல்லாயிரக்கணக்கான மா, பலா, புளி உள்ளிட்ட மரங்கள் புயலினால் பூமியில் சாய்ந்து கிடக்கிறது. சொல்ல முடியாத பெரும் வேதனையில் மக்களை ஆழ்த்தியுள்ளது. நெற்பயிர்கள், கால்நடைகள் என பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் மரங்கள் இருந்த இடங்கள் மொட்டையாக நிற்கின்றன. எந்த மரங்களுமே ‘கஜா’ புயலுக்குத் தாக்குப் பிடிக்கவில்லை. கிராமங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது 1 மாதத்திற்கு மேலாகும் என்று கூறப்படுகிறது. புயலினால் பாதிக்கப்பட்ட தென்னைகளின் வேர்பகுதிகள் மேலோட்டமாகவே காணப்பட்டது என்று வேளாண் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யப்பட்டு வருகிறது.

அழிவுப்பாதையின் விளிம்பில் பனைமரம்! பனைத்தொழில்!! பனைமரத்தின் பயன்கள்:-

பனைமரங்கள்…

புயலின் தாக்கத்தினால் அனைத்துவிதமான மரங்களும் பூமியை நோக்கிய நிலையில் பனைமரங்கள் மட்டும் உயர்ந்து நிற்கிறது. சில இடங்களில் அதுவும் விழுந்து கிடைக்கிறது. திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலை எதிர்க்கொண்டு ஆயிரக்கணக்கான பனைமரங்கள் வானுயர்ந்து நிற்கிறது. இத்தகைய தீவிரமான இயற்கை சீற்றத்திற்கு முன்னும் இந்த மரங்கள் எவ்வாறு தாக்குப்பிடிக்கிறது என்பது குறித்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் தாவரவியல் துறை முன்னாள் தலைவர் எம். நரசிம்மன் பேசுகையில் “கஜா புயலையும் எதிர்க்கொண்டு பனைமரங்கள் இன்று உயிரோடு இருப்பதற்கு மூன்று காரணிகள் உள்ளது. முதல் அதனுடைய வேர்கள் கட்டமைப்பு; நரம்புமண்டலம் (சல்லிவேர்கள் பரவலாக ஊடுருவிச் சென்று மண்ணை இறுக்கப் பற்றும்) போல் செல்லும் அதன் வேர்கள் மிகவும் பற்றி பிடிக்கும் தன்மையை கொண்டது. இரண்டாவதாக மரத்தின் தண்டுகளில் உள்ள வாஸ்குலர் அமைப்பு மரத்திற்கு நெகிழ்வளிக்கும். மூன்றாவதாக மரத்தின் தலைப்பகுதி மடிந்த இலைகள் கொண்டமையால் வலுவான காற்றுகளை தாங்கிக்கொள்ள உதவுகிறது,” என்றார்.

புயலினால் சில மரங்கள் முறிந்து விழுந்திருக்கத்தான் செய்கிறது. ஆனால், புயல் காலங்களில் வீசும் காற்றினால் தென்னை மரங்களில் இரண்டு, மூன்று பாகங்களாக முறித்து எரியமுடியும். ஆனால் அதுபோன்ற இழப்பை பனைமரங்களுக்கு ஏற்படுத்த முடியாது. பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாகும். உங்களிடம் தலையில் கனமில்லை என்றால் கடினமான நிலையிலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பனைமரம் விவகாரத்தில் பொருந்தும். பனைமரத்தின் தலைப்பகுதி மிகவும் பாரம் நிறைந்ததாக இருக்காது. 2011 தானே புயலின்போது அவை பாதுகாப்பாக இருந்தது என கூறியுள்ளார். பனைமரங்களை மேலும் நடவு செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் அவர், “எங்கெல்லாம் பனைமரங்கள் வளர்கிறதோ அங்கெல்லாம் நிலத்தடிநீரை உறுதிசெய்ய முடியும், ஏனென்றால் அதனுடைய வேர்கள் மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கும்” என்று கூறியுள்ளார்.

பனைமரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை தலைவர் டாக்டர் பி. ரவிசந்திரன் பேசுகையில், மரத்தின் தலைப்பகுதி, தண்டுப்பகுதி மற்றும் வேரமைப்புகள் எந்தஒரு அழிவையும் எதிர்க்கொள்ளும் பலத்தை கொடுக்கிறது. தென்னை மரத்துடன் ஒப்பிடும் போது பனைமரத்தின் தலை மற்றும் தண்டுப்பகுதி மிகவும் பாரமானது கிடையாது. அதனுடைய வேர் அமைப்புகள் நார் போன்றது, 5 அடி அகலம் வரையில், 10 அடி ஆழம் வரையிலும் பற்றியிருக்கும் என்று கூறியுள்ளார். வேர் அமைப்பு வலிமையானது மற்றும் தண்டுப்பகுதி நெகிழ்வானது, அதிக காற்றின் திசைவேகத்தை தாங்கிக்கொள்ளலாம், எளிதில் முறியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பனை வளர்ப்போம்

பனை மரத்தின் வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே பயன்படக்கூடியவையே. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் கருப்பட்டி, வெள்ளை சர்க்கரையைவிட உடல் நலத்திற்கு மிகவும் மகத்தானது, ரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைக்கவும், மேனியை பளபளப்பாக வைக்கவும், உடல் நலமாக வைக்கவும் பயன்படுகிறது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனம்பழம், தவுன் மற்றும் கிழங்கும் பல்வேறு நன்மையை கொண்டு உள்ளது. பனங்கிழங்கு நார்சத்து மற்றும் இரும்பு சத்தை கொண்டு உள்ளது. உடல் வழுப்பெறுவதற்கு பனங்கிழங்கு பயனுள்ளதாகும். பனைமரத்தினால் கிடைக்கும் பொருட்களின் நன்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. எனவே,

இன்று பனைமரமும் வர்த்தக ரீதியாக தென்னையை போன்று பலனளிப்பதாகவே உள்ளது.

பனையை பொறுத்தரவரையில் செலவு எதுவும் கிடையாது, பலன் அதிகம். விவசாயிகள் தங்கள் இடங்களில் பனைகளை வெட்டுவதை நிறுத்த வேண்டும். கடந்த 45 ஆண்டுகளில் 2 கோடி பனை மரங்கள் அழிந்துள்ளன. பயனளிக்கும் பனை மரங்களை அதிகம் வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்.