60 ஆயிரம் ஆண்டு பழமையான சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்…

Read Time:13 Minute, 14 Second

சென்டினல் தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள். அவர்கள் வேற்று மனிதர்களை விரும்பவது கிடையாது.

தடை செய்யப்பட்ட பகுதி

அழகே உருவான அந்தமான் தீவு சிறைக்கும் சுற்றுலாவுக்கும் பெயர் போனது. யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமானில் பல சிறிய தீவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் வடக்கு சென்டினல் தீவு. அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கிறது. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்கு செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சென்டினல் தீவு கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. சென்டினல் பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய முதல் மனித இனத்தின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படுகிறது. வடக்கு சென்டினல் தீவு மக்கள் நெக்ரிட்டோ என்னும் பூர்வகுடி வகையைச் சேர்ந்தவர்கள். தீவுக்குள் இருக்கும் காட்டுப்பன்றி, தேன், பழங்கள், மீன், தேங்காய் உள்ளிட்டவையே இவர்களின் உணவு. மரப்பட்டைகளைத்தான் ஆடைகளாக அணிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் கற்காலத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெளி உலக தொடர்பே இன்றி வாழ்கின்றனர். வேற்று மனிதர் சென்டினல் தீவில் கால் வைத்தால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை.

சென்டினல் பூர்வகுடிகள் 350 அடி தொலைவுக்கு உட்பட்ட எந்தப் பொருள் மீதும் குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்கள். அந்தத் தீவில் சுமார் 150 பேர் வரை வசிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தங்கள் இடத்திற்கு வருபவர்களை சென்டினல் தீவு பூர்வகுடிகள் கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல. 18-ம் நூற்றாண்டிலேயே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2004-ம் ஆண்டு சுனாமியின் போது தங்களை மீட்க வந்த அதிகாரிகளைக்கூட பூர்வகுடிகள் தாக்கினர்.

2006-ஆம் ஆண்டு வழிதவறி வந்த இரண்டு மீனவர்களை பூர்வகுடிகள் கொலை செய்தனர். மீனவர்களின் உடலை எடுக்கச் சென்ற கடலோர பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் மீதே அம்பு எய்திருக்கின்றனர் சென்டினல் பூர்வகுடிகள். அப்படி என்றால் வேற்று மனிதர்கள் யாரும் சென்டினல் தீவுக்குள் நுழைந்து விட்டு உயிரோடு திரும்ப முடியாதா? அதுவும் ஒருமுறை நடந்திருக்கிறது.

1991-ம் ஆண்டு பூர்வகுடிகளை சந்திக்க குழு ஒன்று பரிசுப் பொருள்களுடன் சென்றது. குழுவினர் வழங்கிய தேங்காய்களை மட்டும் சென்டினல் பூர்வகுடியினர் பெற்றுக் கொண்டனர். அந்தக் குழுவினரை பூர்வகுடிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதன்பிறகு சென்டினல் தீவுக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை. பூர்வகுடிகள் நாகரிக வளர்ச்சி பெற்றவர்களை வேற்று மனிதர்களாகவே பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கூட முழுமையாக இல்லை. அறிவியலும் நாகரிகமும் அசுர வளர்ச்சி பெற்று விட்ட இந்தக் காலத்தில் சென்டினல் பூர்வகுடிகள் அதிசயமானவர்கள்தான்.

அமெரிக்கர் கொலை

இந்நிலையில் தடையை மீறி அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) மீனவர்கள் உதவியுடன் நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றார். முதலில் ஜான் ஆலனை ஏதும் செய்யாமல் இருந்த அந்தப் பழங்குடியினர், பின்னர் அம்பு எய்திக் கொலை செய்து, அங்கேயே புதைத்துவிட்டனர் என மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அந்தத் தீவுக்கு போலீஸார், கடற்படையினர் உள்ளிட்ட ஒருவரும் செல்ல அச்சப்படும் சூழலில் அமெரிக்கர் ஜான் ஆலன் உடலை மீட்பது பெரும் சவாலாக உள்ளது.

ஜான் ஆலன் சாவ்

நார்த் சென்டினல் தீவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன், அமெரிக்கர் உடலை மீட்கச் சென்ற கடற்படையினரை நோக்கி சென்டினல் பழங்குடிமக்கள் வில் அம்பு மூலம் குறிவைத்ததால், அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். சென்டினல் பழங்குடிமக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அமெரிக்கர் உடலை மீட்க வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது.

மக்கள் தொகை எவ்வளவு?

அமெரிக்கர் ஜான் சட்டத்தை மீறி 7 மீனவர்கள் துணையுடன் அங்குச் சென்றுள்ளார். ஆதலால், அந்தசென்டினல் தீவின் பாரம்பரியம், பழமை ஆகியவற்றை ஆராயாமல் அங்கு சென்று விசாரணை செய்யக்கூடாது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாக கூறப்படுகிறது. கடந்த 1901 முதல் 1921-ம் ஆண்டுவரை ஆங்கிலேயர்கள் கணக்கின்படி, 117 பேர் வரை வாழ்ந்துள்ளனர். அதன்பின் 1931-ம்ஆண்டு, அந்த எண்ணிக்கை 50 ஆகவும், பின் 1991-ம் ஆண்டு 23 பேராகவும் சென்டினல் மக்கள் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கில் 39 பேர் வாழ்ந்து வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

ஆனால், மானுவியலாளர்கள் அங்கு 400 பேர் வரை வசிக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறார்கள். சென்டினல் மக்களை இதுவரை சந்தித்த ஒரே நபர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். கடந்த 1960-களில் அங்கு சென்றுவந்துள்ளார். அப்போது 90 பழங்குடிவரை வாழ்ந்ததாக கூறுகிறார்.

சடலத்தை மீட்க முயற்சி

அமெரிக்கர் ஜான் ஆலன் காவ் கொலை தொடர்பாக விசாரித்துவரும் போலீஸ் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதற்கு அவருக்கு உதவிய 7 மீனவர்களை கைது செய்துள்ளது. அமெரிக்கரின் உடலை மீட்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உடலை மீட்க போலீஸ் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பழங்குடியினர் வில், அம்புவுடன் குறிபார்த்த நிலையில் போலீசார் படகுடன் கரை திரும்பினர்.

அந்தமான் போலீஸ் டிஜிபி தீபேந்திர பதக் பேசுகையில், கடந்த சனிக்கிழமை அன்று நாங்கள் ஒரு படகில் சென்றோம். எங்களுக்கு உதவியாக சில மீனவர்களும் வந்தனர். கடற்கரைக்கு சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு பைனாகுலர் மூலமாக சென்டினல் பழங்குடி மக்களின் நடவடிக்கையை பார்த்தோம். உடனடியாக அவர்கள் எங்களை நோக்கி அம்புகளை எய்தனர். ஆனால் நாங்கள் பதிலுக்கு துப்பாக்கியால் சுடவில்லை. மாறாக மேலும் சற்று தூரம் தள்ளி சென்றோம். அங்கிருந்தடி அவர்களை நாங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். அவர்களும் அங்கிருந்து செல்லாமல் கண்ணை இமைக்காமல் அப்படியே எங்களை பார்த்தபடி இருந்தனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என நாங்களும் கவனத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

இருந்தாலும், அங்கே செல்ல முடியவில்லை. நீண்டநேரம் முயன்றும் முடியவில்லை. திரும்பி வந்துவிட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு மானுடவியல் ஆய்வாளர்கள் அங்கு சென்று பழங்குடி மக்களிடம் அன்பாக பேசி பழகி தகவல்களை சேகரித்துள்ளனர். எனவே நாங்கள் அதே மானுடவியல் ஆய்வாளர்களை தொடர்பு கொண்டுள்ளோம். பழங்குடி மக்களிடம் நட்புடன் பழகுவது குறித்து அவர்களிடம் கேட்டு தகவல்களை பெறவுள்ளோம். ஒருவேளை சம்மதித்தால் அவர்களையும் அழைத்துக் கொண்டு நார்த் சென்டினல் தீவுக்கு செல்ல பரிசீலித்து வருகிறோம். அவ்வாறு அவர்கள் வந்தால் அமெரிக்கர் ஆலனின் உடலை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

மானுடவியலாளர்கள் சொல்வது என்ன?

அமெரிக்கரின் சடலத்தை மீட்பது என்பது எளிதான காரியம் கிடையாது, பாதுகாக்கப்பட்ட பழங்குடியினருக்கு எதிராக எந்தஒரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என மானுடவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நார்த் சென்டினல் தீவுக்குள் வெற்றிகரமாக தனது குழுவினர் 20 பேருடன் சென்றுவந்தவர் மானுடவியலாளர் டி.என். பண்டிட்டிற்கு 83 வயதாகிறது. அவர் சென்டினல் பழங்குடிகள் குறித்து பேசுகையில், அந்தமானில் உள்ள இந்திய மானுவியல்துறையில் பணியில் இருந்தபோது கடந்த 1967-ம் ஆண்டு 20 பேர் கொண்ட குழுவாக நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றோம்.

சென்டினல் பழங்குடிகளுக்கு தேங்காய் கொடுத்த காட்சி…

நாங்கள் சென்றநேரம் யாரும் இல்லை என்பதால், காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் வரை நடந்தோம். அங்கு 18 குடிசைகள் வரை கட்டப்பட்டு இருந்தன. ஒரு குடிசையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. யாரே சிலர் சமையல் செய்து கொண்டிருந்து. மீன்களும், மாமிசத்தையும் தீயில் வாட்டிக்கொண்டிருந்தனர். பழங்களும் அந்த வீட்டில் இருந்தன. அவர்கள் எந்த உடையும் அணியவில்லை, இலைகளையும், மரத்தின் குச்சிகளையும் கோர்த்து ஆடைகளாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், நாங்கள் இருந்த ஒருமணிநேரத்தில் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. ஆனால், நார்த் சென்டினல் மக்கள் வருவதை அறிந்து நாங்கள் மீண்டும் படகில் ஏறிக்கொண்டு, அவர்களின் அம்பு வராத தொலைவுக்கு நின்று கொண்டு, தேங்காய்களையும், சில சமையல் பாத்திரங்களையும் தூக்கிவீசினோம். அவர்களுடைய மொழி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதைப் புரிந்துகொள்ள முடியாது. நான் பார்த்தவரை 90 வரை பேர் வாழ்ந்திருப்பார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது. சென்டினல் பழங்குடிமக்களைப் பொறுத்தவரை வெளியில் இருந்து வருபவர்கள் யாரையும் கைதிகளாகப் பிடிப்பதில்லை. தங்கள் பகுதிக்குள் வரும் மக்களை எச்சரிக்கிறார்கள், யாரையும் கொல்வதில்லை. யாருடைய இடத்தையும் ஆக்கிரமிப்பதில்லை. அவர்கள் கேட்பதில்லொம் “ எங்களைத் தனியாக விடுங்கள்” என்பது மட்டும்தான். வெளிஉலக மக்களின் வருகையை அவர்கள் சிறிதுகூட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அவர்களுக்கு தொல்லைக் கொடுக்க கூடாது என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்கரின் சடலத்தை மீட்பது என்பது சவாலனதே என்பதும் அவர்களுடைய கருத்தாகும்.