உலகக்கோப்பை ஹாக்கியில் முத்திரைப் பதித்த இந்தியா; தென் ஆப்பிரிக்காவை 5-0 என்று பந்தாடியது

Read Time:5 Minute, 36 Second

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை பந்தாடி வெற்றியுடன் தொடங்கியது.

1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலக கோப்பை ஹாக்கி போட்டியில், 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. உலக கோப்பை ஹாக்கி முதல் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. பாகிஸ்தான் வெற்றியை தனதாக்கியது. உலக கோப்பை ஹாக்கி போட்டி 2 ஆண்டுகள் இடைவெளியிலும், 3 ஆண்டுகள் இடைவெளியிலும் பின்னர் 4 ஆண்டுகள் இடைவெளியிலும் நடைபெறுகிறது.

1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதுவரை சாம்பியன்கள்

1971 – பாகிஸ்தான்
1973 – நெதர்லாந்து
1975 – இந்தியா
1978 – பாகிஸ்தான்
1982 – பாகிஸ்தான்
1986 – ஆஸ்திரேலியா
1990 – நெதர்லாந்து
1994 – பாகிஸ்தான்
1998 – நெதர்லாந்து
2002-ஜெர்மனி
2006 – ஜெர்மனி
2010 – ஆஸ்திரேலியா
2014 – ஆஸ்திரேலியா

ஒடிசாவில் போட்டி

இந்நிலையில் 16 நாடுகள் பங்கேற்கும் 14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் புதன்கிழமை தொடங்கியது. இப்போட்டி டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் இந்தியா 5-வது இடமும், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியா 8-வது இடமும் பெற்றது.

வெற்றியுடன் தொடங்கியது

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை உச்சி முகர்ந்து இழந்த பெருமையை மீட்டெடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணி வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றே வல்லுநர்களின் கணிப்பு உள்ளது. 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய 7 இளம் வீரர்கள் இந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பது பலமாக அமையும்.

முதல் நாளான நேற்று உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 15-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது.

இந்தியாவின் அதிரடியால் 10-ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. தென்னாப்பிரிக்க தரப்பு விதிமீறிய வகையில் பந்தை தடுத்ததால் இந்தியா மேல்முறையீடு செய்ய முடிவில் முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த முயற்சியில் தென்னாப்பிரிக்க கோல் கீப்பர் பந்தை தடுக்க களத்துக்கு திரும்பிய பந்தை மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் மன்தீப் சிங். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஆகாஷ்தீப் சிங் அருமையான ஃபீல்டு கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னேறியது. இவ்வாறாக நிறைவடைந்த முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

பிற்பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. தென்ஆப்பிரிக்க வீரர்கள் தடுப்பு ஆட்டத்திலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்திய வீரர்கள் சிம்ரன்ஜீத் சிங் 43-வது நிமிடத்திலும், லலித் உபாத்யாய் 45-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டனர். 46-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சிம்ரன்ஜீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடியும் தென்ஆப்பிரிக்க அணியால் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை பந்தாடியது. இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் பாராட்டு குவிந்தது.

சிம்ரன்ஜீத் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற 2-ந் தேதி பலம் வாய்ந்த பெல்ஜியத்துடன் மோதுகிறது.