ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை

Read Time:7 Minute, 20 Second

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவைகள் தாமிரபரணி ஆற்றின் மூலமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணை ஆகியவற்றை சேர்ந்த 4 கால்வாய்கள் மூலம், 46,107 ஏக்கர் நன்செய் நிலங்கள் சாகுபடியில் உள்ளன. நன்செய் நிலங்களை நம்பிதான் கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது.

ஆனால் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத மின்மோட்டார் மூலம் தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மிக குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

20 எம்.ஜி.டி. திட்டம்

ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் மூலம் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்க கடந்த 1970-ம் ஆண்டு 20 எம்.ஜி.டி. திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ரூ.4.70 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டம், 1975-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கனஅடி தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணை வடகாலில் இருந்து எடுத்து, தூத்துக்குடி பகுதியில் உள்ள ஸ்பிக், டாக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையம், தாரங்கதாரா ரசாயன ஆலை, தூத்துக்குடி சிப்காட், ஸ்டெர்லைட் தொழிற்சாலை, பழையகாயல் ஜிர்கோனியம் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.

20 எம்.ஜி.டி. திட்டம் காரணமாக, கடந்த 1975-ம் ஆண்டுக்கு பின் தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி பாசனத்தில், கடந்த 35 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கவில்லை. முன்கார் சாகுபடியும் முறையாக கிடைக்கவில்லை. பிசான சாகுபடிக்கும் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இருப்பினும் இந்நிலையில் 20 எம்.ஜி.டி. திட்டத்தை 23 எம்.ஜி.டி. திட்டமாக மாற்றி ரூ.28 கோடி செலவில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் இருந்து 24 கி.மீ. தொலைவு வரை ராட்சத குழாய்கள் பதித்து, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக ராட்சத குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

விவசாயம் பாதிப்பு

இவ்வாறு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்வதால், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இப்பாசனத்தில் உள்ள 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கும் ஒரு போகத்துக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கும் நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் குடிநீர் கஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தாமிரபரணி ஆறு மற்றும் அணையிலிருந்து தொழிற்சாலைகள் நேரடியாக தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்கக்கூடாது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு சென்னையிலிருந்து டெல்லி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்கிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

“ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். வனத்துறைக்குட்பட்ட பகுதியிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் எடுக்க வேண்டுமெனில் அதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் முறையாகப் பெறவேண்டும். ஆனால், இதில் விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வடிகால் வாரியத்தினர் இதில் திட்டமிட்டே குடிநீர் தேவை என்ற பொய்யான காரணத்தை சொல்லி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கி வந்துள்ளனர்.

எனவே முழுக்க முழுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்தத் தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. முப்போக சாகுபடி விவசாயத்தை முடக்கிய, பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த 20 எம்.ஜி.டி. திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழக்கில் சாதகமான தீர்ப்பால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.