தமிழக அரசின் அரசாணை ரத்து; ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

Read Time:8 Minute, 13 Second

தமிழகத்தில் புராதன கோவில்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் பல கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கடத்தல் சம்பவங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தொடர்பு உள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலுடன் போலீசார் கை கோர்த்து சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளனர் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவை உருவாக்கி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணையை தொடங்கினார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, தலைமை ஸ்தபதி முத்தையா உள்பட பலரை அவர் கைது செய்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரணையில் முக்கிய புள்ளிகள் வரிசையாக சிக்கினர். மேலும் ஒரு சில முக்கியஸ்தர்களுக்கும், தமிழக அரசு அதிகாரியும் சிலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவரது விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பல சிலைகள் மீட்கப்பட்டன.

சிபிஐக்கு மாற்றம்

விசாரணை தொடர்ந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளையும், இனிமேல் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்டு 1 அன்று சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனிச்சையாக செயல்படுவதால் அவரது விசாரணயில் திருப்தி ஏற்படவில்லை. எனவே இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இடைக்கால தடை

இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியது இருப்பதால், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திய போதிலும் இதுவரை ஒரு அறிக்கை கூட அளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டது. இதற்கிடையே சிலை கடத்தல் குற்றங்களை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வைத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது. இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது.

அரசின் உத்தரவு ரத்து

இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. ”சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசு தரப்பு பிறப்பித்த உத்தரவு  முற்றிலும் தவறானது. உள்நோக்கம் இல்லை என அரசு தரப்பு தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த அரசாணை சட்டவிதிகளுக்கு புறம்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ளதால் அரசாணை செல்லாது” என்று தீர்ப்பளித்தது.

பொன். மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு

இன்றுடன் ஓய்வு பெறும் பொன். மாணிக்கவேலை மேலும் ஒரு ஆண்டு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.

ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து அவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என உத்தரவிட்டது. இதுவரை விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது என என்னென்ன பணிகளை இதுவரை செய்துவந்தாரோ அதே பணிகளை அவர் தொடர்வார் என உத்தரவிட்டது. தமிழக அரசும், மத்திய அரசும், சிபிஐயும் அவரது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

சிலைக்கடத்தல் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளையும், இனி பதிவாகும் வழக்குகளையும் அவரே விசாரணை செய்ய வேண்டும், அவர் நீதிமன்றத்தில் மட்டும் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

சிறப்பாக செயல்படுவேன்

சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், எங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு திறன்பட செயல்பட முடியுமோ அவ்வளவு துரிதமாக செயல்படுவோம். எங்களுடைய விசாரணைக் குழு அப்படியே இருக்கும். அதில் எந்தஒரு மாற்றமும் நிகழாது. அரசுக்காகத்தான் பணியாற்றுகிறோம். எங்களால் யாருக்கும் சிரமம் ஏற்படாது. ஒருவருடத்தில் எனக்கான பொறுப்பை முடிப்பேன். ஒருவருடத்திற்குள் விசாரணையை முடிப்பேன். உறுதியாக சிலைகளை கொண்டுவருவேன். ஊதியமே வழங்கவில்லை என்றாலும் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்று கூறினார்.

1,146 சிலைகள் மீட்பு

கடந்த 2012-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அந்த நாள் முதல் இது வரை தமிழக கோயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 201 உலோக சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் உள்பட 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளை சர்வதேச போலீஸார் மூலம் பொன் மாணிக்கவேல் மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளார். கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 2011-ம் ஆண்டு வரை 28 ஆண்டுகளில் 175 கற்சிலைகள், 135 உலோகச் சிலைகள், 3 மரச்சிலைகளை மட்டுமே மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையை மாற்றி, 7 ஆண்டுகளில் 1,146 சிலைகளை மீட்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் தமிழக காவல் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கோவில்களில் சிலைகள் திருடப்படுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்து அறநிலையத் துறைக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் பொன் மாணிக்கவேல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.