இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு; அடுத்தது என்ன?

Read Time:5 Minute, 33 Second

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்திய நிலையில் லண்டன் சென்றுவிட்டார். பலமுறை சம்மன் விடுத்தும் விஜய் மல்லையா நாடு திரும்பவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவருடைய சொத்துகளை முடக்கியது. சி.பி.ஐ.யும் பணமோசடி தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு குழு தீவிரமாக செயல்பட்டது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. வங்கியில் வாங்கிய பணத்தை திரும்பச் செலுத்த தயாராக இருக்கிறேன் என்று விஜய் மல்லையா கூறினார். இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வங்கி மோசடி வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று உத்தரவிட்டது.

அடுத்தது என்ன?

லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவு இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கைகளை உள்துறை மேற்கொள்ளும். இருப்பினும், இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யலாம். விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை மந்திரி உத்தரவிடுவார். அவர் உத்தரவிட்ட 28 நாளில் அவர் நாடு கடத்தப்பட்டு விடுவார். விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டால் அவரை அடைப்பதற்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது.

எனக்கு அதிர்ச்சி எதுவும் கிடையாது

இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக விஜய் மல்லையா பேசுகையில், என்னுடைய சட்டத்துறை குழு தீர்ப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்யும். பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வு செய்யும். அதன் பின்னர் என்னுடைய நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு முன்னதாக மல்லையா பேசுகையில், நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை, பணத்தை திரும்ப செலுத்துவேன் என்பது யாரையும் ஏமாற்றும் நடவடிக்கை கிடையாது என்று கூறினார்.

பல மாதங்கள் ஆகலாம்

இதற்கிடையே விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் என லண்டன் சட்ட நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா கூறுகையில், “இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. எனினும் அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருப்பார்.

உயர்நீதிமன்ற உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம்” என்றார்.

பொருளாதார குற்றவாளி

லண்டன் நீதிமன்ற தீர்ப்பு இந்திய விசாரணை முகமைகள் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யைக்கு சாதகமாக அமைந்துள்ளது. விஜய் மல்லையாவை பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பதில் விசாரணை முகமைகள் அடுத்து தீவிரம் காட்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டப்படி பொருளாதார குற்றங்கள் செய்தவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ள போது, நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொள்ளாமல், இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புகளிலிருந்து தப்பித்து தலைமறைவானால், அவர்களை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அவர்களது சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்யலாம் என்ற அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டது.