பா.ஜனதா கோட்டைகளை காங்கிரஸ் தகர்த்தது!

Read Time:18 Minute, 32 Second

பா.ஜனதாவின் கோட்டையாக விழங்கிய மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றியை தனதாக்கியுள்ளது. ராஜஸ்தானிலும் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

5 மாநில தேர்தல்கள்

2019 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி எவ்வாறு பலன் அளிக்கும் என்பதை பார்க்கும் வகையில் இத்தேர்தல் நடைபெற்றது.

90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ம் தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. 119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

மிகுந்த ஆர்வம்

2019 ஏப்ரல், மே மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

2019 தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்தது. இந்நிலையில் 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா பெரும் பின்னடவை சந்தித்துள்ளது.

சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி

பா.ஜனதா கோட்டையாக விழங்கிய சத்தீஷ்கரில் பாரதீய ஜனதா 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஷ்கர் 2000–ம் ஆண்டில் பிரித்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் ஜோகி முதல்வராக பதவி வகித்தார். 2003–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. பின்னர் நடைபெற்ற 2008, 2013 தேர்தல்களிலும் வெற்றியை தனதாக்கியது. முதல்வர் ராமன்சிங் தொடர்ந்து 3 முறை முதல்வர் பதவி வகித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இப்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியே தொடர்ச்சியாக முன்னிலைப் பெற்றது. பா.ஜனதா எட்டமுடியாத அளவு அதிகமான தொகுதியில் முன்னிலை பெற்ற காங்கிரஸ் பெரும்பான்மைக்கு அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை 46 ஆகும். ஆனால் காங்கிரஸ் அதைவிட கூடுதலான தொகுதியை தனதாக்கியுள்ளது. காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பா.ஜனதா 15 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கூட்டணி 7 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து அஜித் ஜோகி தொடங்கிய ஜனதா காங்கிரஸ் , மாயாவதியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் வெற்றியை அடுத்து சத்தீஷ்கார் பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி

200 இடங்களை கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவே மாறி, மாறி ஆட்சி செய்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனைக்கு மத்தியில் மாநிலத்தில் பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. அம்மாநில பா.ஜனதா முதல்வர் வசுந்தரா ராஜே மக்களால் எளிதாக அணுக முடியாத நிலையை பின்பற்றுகிறார் எனவும் விமர்சனம் எழுந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடர்ச்சியிலே காங்கிரஸ் ஆட்சியை தனதாக்கும் என்று தெரியவந்தது.

பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் ஆட்சி காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. அங்கு ஆட்சியமைக்க தேவையான தொகுதியின் எண்ணிக்கை 101 ஆகும். காங்கிரஸ் கூட்டணியே 101 இடங்களை பிடித்துவிட்டது. பா.ஜனதா 73 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. காங்கிரஸ் வசம் ஆட்சி சென்றுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் தன்னுடைய ராஜினாமாவை வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு பெரும் அடி

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா 15 ஆண்டுகளாக ஆட்சி செய்தது.

2003-ம் ஆண்டிலிருந்து பா.ஜனதாவின் கோட்டையாக மத்திய பிரதேசம் இருந்து வந்தது. 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜனதா சார்பில் சிவராஜ் சிங் சவுகானை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அந்த அளவிற்கு சிவராஜ் சிங் சவுகான் பெரும் செல்வாக்கு பெற்று இருந்தார். இதனால் அங்கு பா.ஜனதா ஆட்சிக்கு பெரும் நெருக்கடி இருக்காது என்று பார்க்கப்பட்டது. அவர் 2003-ல் இருந்து முதல்வராக இருந்து வருகிறார்.

விவசாயிகள் பிரச்சனையில் பெரும் சவாலை எதிர்க்கொண்ட நிலையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் மாநிலத்தில் பெரும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று கடுமையான போட்டி நிலவியது. ஆனால் ஆட்சி காங்கிரஸ் வசம் செல்லும் வகையில் இருந்ததுள்ளது.

மத்திய பிரதேசம் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவிற்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. முதலில் காங்கிரஸ் அதிகத் தொகுதியில் முன்னிலை பெற்றது. பின்னர் பா.ஜனதா முன்னிலை பெற்றது. பின்னர் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியை அமைப்பதற்கான மெஜாரிட்டியை நோக்கி முன்னிலைப் பெற்றது. ‘நீயா, நானா?’ மோதலில் காங்கிரஸ் – பா.ஜனதா சரிசமமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியே அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 116 ஆகும். காங்கிரஸ் மட்டும் 112 தொகுதிகளில் வெற்றிப்பெற்று 115 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. சுயேட்சை ஒருவருடைய ஆதரவு கிடைத்தாலும் அங்கு காங்கிரசுக்கு போதும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவும் காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய பிரதேசம் முடிவு விபரம் :

பாஜக- 115
காங்கிரஸ்- 108
பகுஜன் சமாஜ் – 2
சமாஜ்வாதி -1
சுயேச்சை- 4

இந்தியாவின் மத்தியில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டையாக விழங்கிய மாநிலங்களில் முக்கியமான மாநிலமாகும். இது அக்கட்சியை விட்டு போவது பெரும் பின்னடைவாகும். இதற்கிடையே ஆட்சியமைக்க காங்கிரஸ் விடுத்த கோரிக்கை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா கோட்டைகள் தகர்ப்பு

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.


சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, ராமன் சிங்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வந்துள்ளது. பா.ஜனதாவின் கோட்டைகளாக பார்க்கப்பட்ட மாநிலங்கள் அக்கட்சியைவிட்டு சென்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் பா.ஜனதா அதிகமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. பா.ஜனதா 41 சதவித வாக்குகளையும், காங்கிரஸ் 40.9 சதவித வாக்குகளையும் பெற்றுள்ளது. ராஜஸ்தானிலும் இரு கட்சிகள் இடையே கடுமையான போட்டிதான் நிலவியது. அங்கு காங்கிரஸ் 39.3 சதவித வாக்குகளையும், பா.ஜனதா 38.8 சதவித வாக்குகளையும் பெற்றுள்ளது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் 43 சதவித வாக்குகளையும், பா.ஜனதா 33 சதவித வாக்குகளையும் பெற்றுள்ளது.

சந்திரசேகர ராவ்தான் கிங்

தெலுங்கானாவில் பலரும் எதிர்பார்த்தது போலவே தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியை பிடித்தது.

பல ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவை தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை சட்டப்பேரவையின் பதவிக்காலம் உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு 6 மாதங்கள் முன்கூட்டியே டிசம்பரில் தேர்தலைச் சந்தித்தார் சந்திரசேகர் ராவ். மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால் அதன் பாதிப்புகள் இருக்கும். மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதன் தாக்கம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என சந்திரசேகர் ராவ் கருதினார்.

எனவே முன்கூட்டி தேர்தல் என்ற வியூகத்தை வகுத்தார். அதற்கு பலனும் கிடைத்தது. மாநிலத்தில் நான் தான் கிங் என்பதை நிரூபித்துள்ளார். இரண்டு தேசியக் கட்சிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்தித்த சந்திரசேகர் ராவின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 60 ஆகும். அங்கு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மட்டுமே 88 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது. காங்கிரசுக்கு 19 தொகுதிகள் கிடைத்துள்ளது. அதனுடன் கூட்டணி வைத்த தெலுங்கு தேசம் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது. பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்டிருந்த பா.ஜனதா ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 46.9 சதவித வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 28.4 சதவித வாக்குகளையும், பா.ஜனதா 7 சதவித வாக்குகளையும் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் வெறும் 3.5 சதவிதம் வாக்குகளைதான் பெற்றுள்ளது.

வடகிழக்கில் காங்கிரஸ் வாஷ்-அவுட்

மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணியிடம் ஆட்சியை இழந்துள்ளது. மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை தனதாக்கியது. காங்கிரஸ் 5 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 8 தொகுதியை பெற்றுள்ளனர். 2014 பொதுத் தேர்தலுக்கு பின்னர் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் சரிவை சந்தித்துவந்த காங்கிரசிடம் கடைசியாக இருந்த மாநிலம் மிசோரம். அதுவும் இப்போது காங்கிரசை விட்டு சென்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்ற வாஷ்-அவுட் நிலைக்கு சென்றுள்ளது.

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

5 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழக்கிறது என்று தெரியவந்தது. இதுகுறித்து நெட்டிசன்கள் அணல் பறக்கும் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது. வட இந்தியாவிலே இந்த அடின்னா, தென்னிந்தியாவில்? என்றும் நீருக்குள் மூழ்கிடும் தாமரை, சற்றென்று மாறுது வானிலை என்றும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இதுபோன்று பா.ஜனதாவின் மீதான கோபம்தான் உங்களுடைய வெற்றி காரணம், மார்தட்ட வேண்டாம் என காங்கிரசையும் விமர்சித்து வருகிறார்கள்.

வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஓர் அங்கம்

தேர்தல் முடிவுகளை அடுத்து வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஓர் அங்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் நாங்கள் சேவை செய்ய மக்கள் வாய்ப்பளித்தார்கள் அவர்களுக்கு எங்கள் நன்றிகள். இந்த மாநிலங்களில் பாஜக அரசு மக்கள் நலன்களுக்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்தது.

காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். தெலங்கானாவில் அதிரடி வெற்றிபெற்ற கேசிஆருக்கு என் வாழ்த்துக்கள், அதே போல் மிசோரமில் எம்.என்.எஃப். கட்சிக்கும் என் வாழ்த்த்துக்கள். பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் மாநில தேர்தல்களுக்காக பகலிரவு பாராமல் உழைத்தனர். அவர்கள் கடின உழைப்புக்காக நான் வணங்குகிறேன். வெற்றி தோல்வி வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி.

இன்றைய முடிவுகள் மக்களுக்கு இன்னும் சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தும். மேலும் நாட்டுக்காக இன்னும் கடுமையாக உழைக்க எங்களைத் தூண்டும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.