சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும்…

Read Time:4 Minute, 12 Second

தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நிலவிவந்த ஆழ்ந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய கடல்பகுதியில் நிலவுகிறது. இது வியாழக்கிழமை காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், இது வெள்ளிக்கிழமை (டிச.14) ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, தெற்கு ஆந்திரம், வடதமிழகம் நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழக கடலோரம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.14) மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதன் காரணமாக 13-ம் தேதி தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதிகளுக்கும், 14-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும், 15-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து உடனடியாக தெரிவிக்க முடியாது. அதன் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுகுறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘பெதாய்’ புயலால் கடலரிப்பு

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் ‘பெதாய்’ புயல், சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்ட கடலோரப் பகுதி மீனவர்களுக்கு கடும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது. தனியார் வானிலை ஆர்வலரான ந.செல்வகுமார், ‘பெதாய்’ புயலின்போது எழும்பும் பேரலைகளால் கரைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையக்கூடும் என்றும், கடலோர குடியிருப்புகளில் தண்ணீர் புகும் என்றும், கடலரிப்பு அதிகமாக இருக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்திய தேசிய கடற்கரைசார் தகவல் வழங்கும் சேவை மையம் (INCOIS) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், “வங்கக் கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 14-ம் தேதி மாலை 5.30 முதல் 16-ம் தேதி இரவு 11.30 வரையிலான காலகட்டத்தில் தமிழக கடற்கரையில் மணிக்கு 75 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும். தனுஷ்கோடி முதல் பழவேற்காடு வரையிலான கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதன் காரணமாக கடலோரப் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக்கூடும்” என்று எச்சரித்துள்ளது.