வங்கக்கடலில் உருவாகிறது புயல்; வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Read Time:2 Minute, 22 Second

வடதமிழக கடலோர மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும் மசூலிப்பட்டினம் தென்கிழக்கே சுமார் 1090 கி.மீ.தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வரும் டிச. 17-ம் தேதி பிற்பகலில் ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடதமிழக கடலோரங்களில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இந்த புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் 15, 16 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழையும், ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

தரைக்காற்றானது மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் டிச.15, 16 தேதிகளில் கொந்தளிப்புடன் காணப்படும், மீனவர்கள் அந்த தேதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலானது தற்போது வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதுவே மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பெரிய மாற்றமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.