ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை – உச்சநீதிமன்றம்

Read Time:7 Minute, 53 Second

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரூ.58,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆலோசிக்கப்பட்டதை விடவும் கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. குறிப்பாக, ரபேல் விமான உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை டஸால்ட் நிறுவனம் தேர்வு செய்ததில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்தார்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. கொள்முதல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரபேல் விமான கொள்முதல் நடவடிக்கை, விலை நிர்ணயம், அயலக கூட்டு நிறுவனத் தேர்வு ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. 126 அல்லது 36 என எத்தனை விமானங்களை வாங்க வேண்டும் என்று மத்திய அரசை நிர்பந்திக்க முடியாது. அது அரசின் கொள்கை முடிவுகளை சார்ந்தது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேபிசி விசாரணைக்கு வலியுறுத்தல்

இதற்கிடையே ரபேல் விவகாரத்தில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தால் பல்வேறு அடுக்குகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று எங்களுக்கு தெரியும், இதனை ஏற்கனவே நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். காங்கிரஸ் இவ்வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்லவில்லை. ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த இயலுமா? என்று பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு சவால் விடுக்கிறேன்.

நீங்கள் அஞ்சவில்லை என்றால் ஏன் கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கூடாது? விமானங்களின் விலை ரூ.526 கோடியில் இருந்து எவ்வாறு ரூ.1670 கோடியாக உயர்ந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பான அரைகுறையான உண்மைகள் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது யாராலும் ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை என்பது எங்களுடைய வரம்புக்கு அப்பாற்பட்டது என்று நீதிமன்றம் கூறியுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் கூறியதை தவறாக வழிநடத்தாமல், தீர்ப்பை முழுமையாக தெரியப்படுத்த வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு. தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்னதாக மீடியாக்களும், பா.ஜனதாவும் தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. முறைகேடு இல்லையென்று சான்றிதழ் வழங்குவதற்கு இது ஒன்றும் குற்றவியல் மனு கிடையாது என கூறியுள்ள காங்கிரஸ், ரபேல் ஊழல் தொடர்பான முக்கிய கேள்விகள் பதிலில்லாமல் தொடர்கிறது. விமானத்தின் விலை 300 சதவீதம் உயர்ந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ரபேல் போர் விமான பேரம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை, பொது கணக்கு குழுவிடம் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால், உண்மையில், அந்த அறிக்கை, மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான பொது கணக்கு குழுவிடம் அளிக்கப்படவே இல்லை. அந்த அறிக்கை எங்கே போனது? ஒருவேளை, வேறு ஏதேனும் பொது கணக்கு குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளாரா?

எங்களின் அடிப்படை கோரிக்கை, இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். கூட்டுக்குழு விசாரணை நடத்தினால், பிரதமர் மோடி, அனில் அம்பானி ஆகியோரின் பெயர் அம்பலத்துக்கு வரும். மோடி அரசு, எல்லா அமைப்புகளையும் சீரழித்து வருகிறது. அதன் மேற்பார்வையில், ரபேல் பேரத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரூ.526 கோடியாக இருந்த விமானத்தின் விலை, ரூ.1,600 கோடியாக உயர்ந்தது ஏன் என்பதுதான் எங்களது அடிப்படை கேள்வி என்று கூறியுள்ளார். தவறான தகவல்கள் அடிப்படையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

ஜேபிசி விசாரணை இல்லை

முன்னதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அருண் ஜேட்லி ஆகியோர் இது தொடர்பாகக் கூறுகையில், தேசத்தின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திலும் அரசியல் ஆதாயம் பெறும் வகையில் காங்கிரஸ் கட்சி பொய்க்கதைகளை புனைந்தது இப்போது உச்சநீதிமன்றம் மூலம் வெளிப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை கிடையாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டதால் இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிட்டது என்றனர்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக ராகுல் காந்தி இந்த அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் ரீதியாக அவர் முன்னெடுத்த பொய் பிரசாரத்தால் சர்வதேச அளவில் நாட்டின் நன் மதிப்பு கெட்டுவிட்டது என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.