‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து

Read Time:3 Minute, 46 Second

‘உலக சாம்பியன் பட்டம்’ வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.

‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்தது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். முந்தைய போட்டிகளில் சிந்துவின் ஆதிக்கம் அதிகரிக்க இப்போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று ஆட்டம் தொடங்கியதுமே பிவி சிந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.

மின்னல் வேகம், எதிராளியின் தவறை புள்ளியாக்குவதில் கவனம் என மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை பம்பரம் போல் சுழன்று வெளிப்படுத்தினார். இன்றைய ஆட்டம் பேட்மிண்டன் ரசிகர்களுக்கு பெரும் விருந்து அளித்தது. விர்ர்ர்ர்….. விர்ர்ர்ர் என்று காற்றை கிழித்துச் செல்லும் அபார ஷாட்களுக்கும் சிந்து பஞ்சம் வைக்கவில்லை. அவ்வப்போது சரமாரியாக கார்க் பறந்து கொண்டிருந்தது. ஆட்டம் தொடங்கியதுமே ஆட்டத்தை தன்னுடைய வசமே வைத்து விளையாடினார் சிந்து. ஜப்பான் வீராங்களையும் ஆட்டத்தை எளிதாக விட்டுவிடவில்லை. அபாராமாக எதிர்க்கொண்டார். 14-6 என சிந்து முன்னிலை பெற்று விளையாடிய நிலையில் 10 புள்ளிகளை தனதாக்கி ஒகுஹரா 16-16 என்ற சரிசமான நிலையை எட்டினார்.

ஒகுஹரா செய்த தவறுகளை தனக்கு புள்ளியாக்கிய சிந்து, வெற்றியை தனதாக்குவதில் தீவிரம் காட்டினார். செட்டை 21-19 என்ற கணக்கில் வென்றார். கடும் சரிவிலிருந்து மீண்ட ஒகுஹரா இரண்டாவது செட்டில் மேலும் நெருக்கடியை கொடுத்தார். இறுப்பினும் சிந்து கையே ஓங்கியது. இரண்டாவது செட்டையும் 21-17 என்ற கணக்கில் தன்வசப்படுத்திய பிவி சிந்து ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

2017 இறுதிப்போட்டியில் ஒகுஹராவிடம் அடைந்த தோல்விக்கு இந்த முறை சிந்து பழிதீர்த்துக்கொண்டார். பிவி சிந்துவின் 14- வது சாம்பியன் பட்டம் இதுவாகும். 2018-ல் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், தாய்லாந்து ஓபன் மற்றும் இந்திய ஓபனில் வெள்ளிப்பதக்கத்துடன் வெளியேறினார். இம்முறை வெள்ளிக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்கத்தை தனதாக்கினார். உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேக்வால் கடந்த 2011-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரையில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது முதல் பெண்ணாக பிவி சிந்து பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி உள்பட பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.