“ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்” அதிர்ச்சி ரிப்போர்ட்

Read Time:5 Minute, 14 Second

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்என அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் பயன்படுத்தி புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்க்கொண்டு வரும் நிலையில் இதுபோன்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ்(asbestos) துகள்கள் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துகள்களை நுகர்வதால் ஏற்படக்கூடிய இந்த புற்றுநோய் பெரும்பாலும் தொழிற்சாலை, சுரங்கம், கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்பவர்களைத்தான் பாதிக்கும். இப்போது, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் முந்தைய ஆய்வு அறிக்கைகளை ஆய்வு செய்து அந்நிறுவனத்திற்கு எதிராகப் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ராய்டர்ஸ் வெளியிட்டுள்ளது.  

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் துகள்கள் கலந்திருப்பதாக குற்றம் சாட்டி அந்நிறுவனம் மீது 11,700 பேர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நெருக்கடி காரணமாக ஆவணங்களை வெளியிட வேண்டிய சூழலுக்கு ஜான்சன் நிறுவனம் தள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட ஆவணங்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அலசி ஆராய்ந்தது. 1972-ம் ஆண்டிலிருந்து 1975 வரையிலான இடைவெளியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் வேவ்வேறு ஆய்வகங்களில் மூன்று முறை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது

இந்த ஆய்வு முடிவுகளில் சில சாம்பிள்களில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜான்ஸன் & ஜான்ஸன் பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

 ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் துகள்கள் கலந்திருப்பது அந்நிறுவனத்துக்கு 1972-ம் ஆண்டே தெரிந்திருக்கிறது என்பதுதான் இதில் அதிர்ச்சி செய்தியாகும். 10 ஆண்டுகளாக  ஜான்சன் அண்ட் ஜான்சனுக்கு இது தெரியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் ஜூலை மாதம் நியூயார்க்கில் ஒரு பெண் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் அவருக்கு 4.69 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்துகொண்டே இருக்கிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். ஆனால், இன்றுவரை இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை

 இதற்கிடையே எங்கள் தயாரிப்புகளில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் இல்லை. ராய்டர்ஸ் நிறுவனம் ஒரு சார்பாக செய்தி வெளியிட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் விளக்கம் கொடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில்  இவ்விவகாரம் குறித்து சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், எந்த டால்கம் பவுடராக இருந்தாலும் பெண்கள் பிறப்புறுப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது

குழந்தைகளுக்கு டால்கம் பவுடரை அதிகளவில் உடல் முழுவது பூசிவிடும் போது உடலில் உள்ள வியர்வை துவாரங்களை அடைத்துவிடுகின்றன. எனவே குழந்தை உடலில் வியர்வை வெளியேறாது. மேலும் பவுடரை குழந்தைகள் நுகரும் போது நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளின் மவுசு இன்றுவரையில் குறையவில்லை. பிறந்த குழந்தைகளை பார்க்க செல்லும் உறவினர்களும், நண்பர்களும் அந்நிறுவனத்தின் பொருட்கள் அடங்கிய பொருட்களை வாங்கி கிஃப்ட்டாக கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவைவிட வெளிநாடுகளிலும் ஜான்சன் தயாரிப்புகள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியே தெரியவந்துள்ளது.