‘ரங்கா.. ரங்கா… கோவிந்தா…’ கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

Read Time:13 Minute, 44 Second

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையான ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

ஏகாதசி

கிருதயுகத்தில் முரன் என்ற அசுரன் தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். அவன் செய்த கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமானோ, அவர்களை திருமாலிடம் சென்று முறையிடும்படி கூறினார். அதன்படியே தேவர்களும், முனிவர்களும், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலை சந்தித்தனர். காக்கும் தெய்வமான அந்தக் கருணை கடவுள், தேவர்களோடு சேர்ந்து முரனை எதிர்த்து போரிட்டார்.

முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள்.

பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்’ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், ‘ஹூம்’ என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான். அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ”ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்” என்று அருளினார்.

மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

ஏகாதசி விரதம்

எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகவும் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவேதான், காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது. `ஏகாதசி’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் `பதினொன்று’ என்று பொருளாகும். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் (சுக்ல – கிருஷ்ண) வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில்மார்கழி வளர் பிறையில் வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர். மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம். ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன. 6 வயது முதல் 60 வயது வரை உள்ளஆண், பெண்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

மற்ற ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், ‘வைகுண்ட ஏகாதசி’ விரதத்தை மட்டுமாவது கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். விரத நாள்களில் உபவாசம் இருப்பதோடு, ‘விஷ்ணு சகஸ்ரநாம’த்தை பாராயணம் செய்து பிரார்த்திக்க வேண்டும். விஷ்ணு பகவானைப் பாடல்களால் துதித்து, ‘அவரே கதி’ என்ற சரணாகத மனதுடன் இருக்க வேண்டும். ஏகாதசியன்று உபவாசமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு துவாதசியன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு ஒருவருக்கு ஆடை தானம், அன்னதானம், தாம்பூலம், தட்சணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.

மார்கழி மகிமை

மாதங்களில் மகத்தான சிறப்புகளைப் பெற்றுத் திகழ்வது மார்கழி மாதம். அதனால்தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது அவர்களுக்கு அதிகாலை நேரம் ஆகும். அந்த நேரத்தில் தேவர்கள் அனைவரும் மேலான பரம்பொருளை வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது, தெய்வத்துடன் தேவர்களையும் வழிபடும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். தேவர்கள்தான் பரம்பொருளின் பிரதிநிதிகளாக இருந்து, நமக்கு வேண்டிய நன்மைகளை அருள்கிறார்கள்.

மழை வளம், காற்று வளம், மண் வளம் போன்ற உயிர்கள் வாழத்தேவையான அனைத்து நலன்களையும் நமக்கு அருள்பவர்கள். நாம் மார்கழி மாதம் முழுவதும் செய்யும் வழிபாடுகளால் பரம்பொருளையும், பரம்பொருளின் பிரதிநிதிகளான தேவர்களையும் வழிபட்ட பலனைப் பெறுவோம்.

சொர்க்கவாசல் திறப்பு

‘‘வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே’’ என்பதற்கேற்ப ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர்வது என்பது தான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவது தான் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பும், வைகுண்ட ஏகாதசி திருநாளும். வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் கீழ் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பகவான் சொர்க்க வாசலை கடந்து செல்லும்போது அவரை தொடர்ந்து செல்லும் பக்தர்கள் விரஜா நதியில் நீராடிய பலனை அடைவதாகவும், அதன்மூலம் பாவங்கள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் வைகுண்டபேறு (சொர்க்கம்) வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு வாய்ந்தது. பகல் பத்து, ராப்பத்து, இயற்பா சாற்றுமறை என 21 நாட்கள் நடைபெறும். பகல்பத்து திருநாளில் 10–ம் திருநாள் எம்பெருமான் மோகினி அலங்காரத்துடன் காட்சி தருவார். மனிதன் வாழ்வில் மண், பொன், பெண் ஆசைகளை கடக்க முடியாது. இதில் பெண்ணாசையை வெல்வது கடினம். திருப்பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக திருமால் மோகினி வேடம் தாங்கினார். அதில் மயங்கிய அசுரர்கள் அமிர்தத்தை இழந்தனர்.


மோகினி அலங்காரம். ஸ்ரீரங்கம்..

பெண்ணாசையால் மதி இழக்காமல் இறைவன் காட்டிய மார்க்கத்தில் சென்றால் வைகுண்டம் நிச்சயம் என்பதை பக்தர்களுக்கு ரெங்கநாதர் உணர்த்துகிறார். இதுவே மோகினி அலங்கார தத்துவமாகும். மறுநாள் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?

அவதார புரு‌ஷரான எம்பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

மகாலட்சுமி

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெறவேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு அருளாசி புரிந்தாள். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்போருக்கு அனைத்து நலன்களையும் பகவான் வழங்கி வருகிறார்.

நம்மாழ்வார்

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டினார். பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புடையது. வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால் அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் பெருமாளும் முத்தங்கியுடன் காட்சியளிப்பார். இந்நாளில் பெருமாளை வழிபாடு செய்து, குறைவற்ற வாழ்வை வாழ்வோம்.

‘ரங்கா.. ரங்கா… கோவிந்தா…’

ஏகாதிசி உற்சவ நாளான இன்று அதிகாலை 5.30 மணிக்கு ‘ரங்கா.. ரங்கா… கோவிந்தா…’ கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை அலங்காரத்தில், சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சென்னை திருவெல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலிலும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.