சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி; ஆப்ரேஷன் கிரீனை கையிலெடுக்கும் பா.ஜனதா!

Read Time:4 Minute, 52 Second

சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி எதிரொலியாக பா.ஜனதா ஆப்ரேஷன் கிரீனை கையிலெடுக்கிறது.

பா.ஜனதா ஆட்சி செய்த மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. விவசாயிகள் பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்கும் என்று கணிக்கப்பட்டது. இம்மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி, விளைப்பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை உயர்வு போன்ற முக்கிய அறிவிப்புகளை காங்கிரஸ் வாக்குறுதியாக வெளியிட்டது. மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றியையும் தனதாக்கியது. விவசாயிகள் விவகாரத்தில் பா.ஜனதா பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

2019 பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் விவசாயிகள் பிரச்சனையில் கவனம் செலுத்த பா.ஜனதா முற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியது. விவசாயக் கடன் தொடர்பாக நேர்மறையான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியானது. இதற்கிடையே மராட்டியத்தில் வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்பை புதுவிதமாக தெரிவித்து வருகிறார்கள். மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதேபோன்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கும் மனிஆர்டர் சென்றது.

இந்தியாவில் வெங்காயம் உற்பத்தி மையமாக விளங்கும் நாசிக்கில் அரசுக்கு எதிரான நிலை காணப்படுகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அம்மாநில பா.ஜனதா அரசுக்கு எதிராக எழத்தொடங்கியுள்ளது.

ஆப்ரேஷன் கீரின்

இந்நிலையில் இவ்விவகாரத்தில் விவசாயிகளை சரிசெய்ய மத்திய மற்றும் மாநில பா.ஜனதா அரசுக்கள் முற்பட்டுள்ளது.

அதாவது ஆப்ரேஷன் கிரீனை கையிலெடுக்கிறது. ‘ஆப்ரேஷன் கிரீன்’ திட்டத்தின் கீழ், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி விளைவிக்கும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட கூடுதல் விலை கிடைப்பது உறுதி செய்யப்படும். நுகர்வோருக்கும் இவை நியாயமான விலையில் கிடைக்கும். இதன்மூலம் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இதுதொடர்பாக உள்ள பிரச்சினை தீரும். விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது.

மராட்டிய அரசு திட்டம்

மூன்று மாநிலங்களில் தோல்வியை தழுவிய நிலையில் விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மராட்டிய அரசு தீவிரம் காட்டுகிறது. மராட்டியத்தில் இருப்பு வைக்கப்பட்ட வெங்காயமும், இப்போது அறுவடை செய்யப்பட்ட வெங்காயமும் மார்க்கெட்டிற்கு மொத்தமாக வந்துள்ளதால் விலை நிலவரம் விவசாயிகளை பெரும் அதிர்ச்சியடைய செய்யும் வகையில் சென்றுக் கொண்டிருக்கிறது. விலை தலைகீழாக குறையும் நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகள் பயனடைய மானியம் மற்றும் போக்குவரத்து மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இருப்பு வைக்கப்பட்ட வெங்காயத்தின் விலை தரம் குறைவு காரணமாக விலை குறைந்து காணப்படுகிறது, அறுவடை செய்யப்பட்டவைக்கு கிலோ 10 ரூபாய் வரை கிடைக்கிறது எனவும் தரவுகள் தெரிவிக்கிறது. வெங்காயம் விலை 1980-களில் இருந்து இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை கொண்டுள்ளது. 2014 தேர்தலில் இருந்து வெற்றியை மட்டும் பார்த்துவந்த பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவிற்கு சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.